மதுராந்தகம்; மதுராந்தகம் ஏரி, முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேறுவதை அடுத்து, இரண்டாவது மதகு வழியாக, பாசனத்திற்காக நேற்று, தண்ணீர் திறக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரிய ஏரியான, பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான மதுராந்தகம் ஏரி, அதன் முழு கொள்ளளவான, 23.3 அடியை, நவம்பர், 28ம் தேதி எட்டியது. தொடர்ந்து, நீர்வரத்து இருப்பதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில், சம்பா பருவ சாகுபடிக்கு, ஏற்கனவே நாற்று விட்டு, நடவு உள்ளிட்ட பணிகளுக்கு தண்ணீர் தேவை உள்ளதால், ஏரியின், இரண்டாவது மதகை திறக்க, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மதுராந்தகம் எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமையில், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, இரண்டாவது மதகில், பூக்கள் துாவி, நேற்று, தண்ணீரை திறந்து விட்டனர். அப்போது எம்.எல்.ஏ., புகழேந்தி கூறியதாவது:கடந்த காலங்களில், மதுராந்தகம் ஏரி முழுமையாக நிரம்பினால், முப்போகம் சாகுபடி செய்ய, பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் தற்போது, ஏரி முழுமையாக நிரம்பினாலும், அத்தண்ணீரை வைத்து, ஒரு போகம்கூட சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.ஏரியின் நீர் சேகரிப்பு பகுதி முழுதும் துார்ந்துள்ளது. ஏரியை, துார் வாரி சீரமைத்தால் மட்டுமே, அதன் முழு கொள்ளளவான, 23.3 அடி ஆழத்தில், 694 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE