மாதவரம்; குடிநீர் வாரியத்தின் அலட்சியத்தால், தரைமட்ட குழாய்களில் குடிநீர் பிடிக்க வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னை, மாதவரம் மண்டலத்தின், 12 வார்டுகளில், பெரும்பாலான பகுதிகளில், பொது குடிநீர் குழாய்கள், தரை மட்டத்தில் உள்ளன.குறிப்பாக, மாதவரம் அலெக்ஸ் நகர், பால்பண்ணை, புழல், கதிர்வேடு, விநாயகபுரம், புத்தகரம் என, பழைய கிராமப் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குழாய்கள், சாலை மட்டத்திற்கும் கீழே உள்ளன.மாதவரம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மாநகராட்சியாக, 'தரம்' உயர்ந்தப்பட்ட பின், குடிநீர், பாதாள சாக்கடை வரி என அனைத்தும், நிலுவையின்றி வசூலிக்கப்படுகிறது.ஆனால், மண்டலத்தின் பல பகுதிகளில், சாலை மட்டத்திற்கும் கீழே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தான், குடிநீர் பிடிக்க வேண்டிய அவலநிலை தொடர்கிறது.ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும், பலத்த மழை பெய்தால், தரை மட்டத்தில் உள்ள குழாய்கள் மூழ்கி, தண்ணீர் பிடிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இது தவிர, சாலையில் செல்லும் வாகனங்களாலும், குழாய்கள் சேதமடைந்து விடுகின்றன.பல குழாய்களுக்கு, 'டேப்' எனப்படும் மூடி, திறக்கும் வசதியின்றி, கம்பு மற்றும் துணிகள் கட்டி அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலனில்லை.அதிகாரிகளோ, 'நீர்மட்டம் குறைவு என்பதால், குழாயை, 2 அடி மேல் நோக்கி உயர்த்தினால், போதிய அழுத்தம் இன்றி, உங்களுக்கு குடிநீர் கிடைக்காது' என, சாக்குபோக்கு சொல்கின்றனர்.தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், அதிகாரிகளின் பதில் வேதனை அளிப்பதாக உள்ளது என, பொதுமக்கள் புலம்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE