சின்னமனுார் : திராட்சை விதையில் புற்றுநோய் தடுப்பு மருந்திற்கான மூலப்பொருள் இருப்பதாக காமாட்சிபுரத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சின்னமனுார் அருகே உள்ள காமாட்சிபுரம் சென்டக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய திராட்சை சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு இம்மையம், புனே தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலையம், கோகோ கோலா நிறுவனம் சார்பில் நடந்தது. புனே தேசிய திராட்சை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் ஆர்.ஜி.சோம்குமார் தலைமை வகித்தார்.
சென்டக்ட் மைய தலைவர் பச்சைமால் வரவேற்றார். தோட்டக்கலைத்துறை முதுநிலை விஞ்ஞானி அஜய்குமார்சர்மா, திராட்சை சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கினார்.மண் வளம் தொடர்பான தொழில்நுட்பங்களை அஜய்குமார் விளக்கினார். திராட்சையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி பூச்சியல் துறை தலைவர் தீபேந்திரசிங் யாதவ் பேசினார்.
நபார்டு வங்கியின் உதவி பொதுமேலாளர் புவனேஸ்வரி, கிராமப்புற கண்டுபிடிப்புகளுக்கான நிதி உதவி, நபார்டு வழங்கும் கடன் திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் சுருளிப்பட்டி திராட்சை சாகுபடியாளர் சங்கத்தலைவர் முகுந்தன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் திராட்சை சாகுபடியில் தங்களின் அனுபவங்களை விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
திராட்சை விதையில் இருந்து புற்று நோய் தடுப்பிற்கான மூலப்பொருள் இருப்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுவதாகவும், திராட்சையிலிருந்து உலர் திராட்சை, ஆல்கஹால் இல்லாத ஒயின் போன்ற மதிப்புகூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க தேனியில் முயற்சி மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE