ஈரோடு: காவிரியில் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில், ஏழு தடுப்பணைகளிலும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும்போது, அந்நீர் மூலம், காவிரி ஆற்றின் குறுக்கே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள செக்கானூர், குதிரைக்கல்மேடு, நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிகோட்டை, பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம், பாசூர் ஆகிய ஏழு மின் கதவணை திட்ட தடுப்பணைகளில் மின்னுற்பத்தி செய்யப்படும். ஒவ்வொரு கதவணையிலும் தலா, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து, காவிரியில் பாசனத்துக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டு, 500 கன அடி குடிநீருக்காக, மட்டும் திறக்கப்படுகிறது. இதனால் கதவணை மின்னுற்பத்திக்கு அவ்வப்போது நீரை தேக்கி உற்பத்தி செய்தனர். இதனால் கதவணை பகுதியில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் தேங்கின. மேலும். போதிய நீரின்றி அழுத்தம் கிடைக்காததாலும், நேற்று முன்தினம் முதல் மின்னுற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: தற்காலிகமாக மின்னுற்பத்தியை நிறுத்தியுள்ளோம். அதேநேரம், கதவணை மின் உற்பத்தி இயந்திரங்களில் பழுது நீக்கம், ஆகாயத்தாமரை அகற்றம் உள்ளிட்ட பிற பணிகளை மேற்கொள்கிறோம். மழை, காவிரி ஆற்றில் நீர் வரத்து துவங்கினால், மீண்டும் மின்னுற்பத்தி துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE