நாமக்கல்: எப்.சி.,க்கான புதிய விதிமுறைகளை நீக்கக்கோரி, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு, செயலாளர் வாங்கிலி தலைமையில், நாமக்கல் தெற்கு, வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மனு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கனரக வாகனங்களில் பொருத்தும், வேகக் கட்டுப்பாட்டு கருவியை, குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்குமாறு, தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆனால், சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை, எந்த நிறுவனத்திலும் கட்டுப்பாட்டு கருவியை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்து விட்டது. வாகனங்களில் ஒட்டப்படும் ரிப்ளக்டிவ், குறிப்பிட்ட, இரண்டு நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜி.பி.எஸ்., கருவி, ஏற்கனவே லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் கருவியை மட்டுமே பொருத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த மூன்றும், குறிப்பிட்ட நிறுவனங்களை சேர்ந்ததாக இருந்தால் மட்டுமே, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன புதுப்பிப்பு (எப்.சி.,) சான்றிதழ் வழங்குகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும், இன்று (நேற்று), வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், லாரி உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். அதையடுத்து, கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், திருச்செங்கோடு, ராசிபுரம், ப.வேலூரிலும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE