மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பின்னர், கடந்த சில நாட்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
ரங்கீலா, சமத்கார் உள்ளிட்ட ஹிந்தி படங்களிலும், கமல் ஹாசன் நடித்த, இந்தியன் என்ற தமிழ் படத்திலும் நடித்தவர், ஊர்மிளா. இவர் கடந்த ஆண்டு மார்ச் 26 ல் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ., வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் படுதோல்வியடைந்தார். இதன் பின்னர் கடந்த செப்., மாதம் காங்கிரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,கட்சியில் இருந்து விலகிய ஊர்மிளா, அரசியலில் இருந்துஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில், ஊர்மிளா, முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனா கட்சியில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக, உத்தவ் மனைவி ராஷ்மி, ஊர்மிளாவுக்கு சால்வை அணிவித்ததுடன், கையில் கயிறு கட்டிவிட்டார். இதன் பின்னர், அங்கிருந்த பால்தாக்கரே படத்திற்கு ஊர்மிளா மரியாதை செலுத்தினார்.

சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு ஊர்மிளாவை, மாநில அரசு தனது கோட்டாவில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE