சென்னை: நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் எனவும், இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த கோரிக்கை எனவும் பா.ம.க., இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அன்புமணி கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பா.ம.க.,வினர் சென்னையில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனால், பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை நோக்கி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பா.ம.க,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயிலை மறித்து, கற்களை வீசினர்.
இந்நிலையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசி கோரிக்கை மனு அளித்தார்.
இதன் பின்னர் அன்புமணி கூறியதாவது: எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம் கிடையாது. சமூக நீதிக்கான போராட்டம். இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் பிரச்னை அல்ல. உரிமை பிரச்னை. நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது, தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த கோரிக்கை

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கிச் சொன்னோம். அதனைக் கேட்டுக் கொண்ட அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். எங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE