பல்லடம்: பல்லடத்தில் துருப்பிடித்து கிடந்த அரசு வாகனத்தை, கோடீஸ்வரர் ஒருவர் தூய்மை செய்தார்.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கனகராஜ், 55; கோவை விண்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகியாக உள்ளார். கோடீஸ்வரரான இவர், 'பக்கெட் சகிதமாக பல்லடம் தாலூகா அலுவலகம் வந்தார். கொண்டுவந்த பக்கெட்டில் தண்ணீரை பிடித்த அவர், அங்கிருந்து அரசு ஜீப்பை தூய்மை செய்யும் பணியில் தனது நண்பருடன் ஈடுபட்டார்.

இது குறித்து கனகராஜ் கூறுகையில், " பல்லடம் தாலூகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாருக்காக வழங்கப்பட்ட அரசு ஜீப் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்து கிடக்கிறது. இது தொடர்பான செய்தி தினமலர் திருப்பூர் பதிப்பில் சமீபத்தில் வெளியானது. இருந்தும் ஜீப் பராமரிக்கப்படாமல் கிடந்தது கண்டு கவலை அடைந்தேன். மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் ஜீப்பை சுத்தம் செய்தேன். பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுபோன்று பயன்படாத வாகனங்கள் ஏராளமாக கிடக்கின்றன. அவற்றை பயன்படுத்தவோ, அல்லது ஏலத்துக்கு விடவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஜீப்பை தூய்மைப்படுத்திய பின், இது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை தாசில்தார் பானுமதி ஜீப்பை பராமரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோடீஸ்வரரான கனகராஜ், அரசு ஜீப்பை தூய்மைப்படுத்திய சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE