வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், நீரால் பாதிக்கப்படாது என விளம்பரம் செய்தது மோசடி எனக்கூறி இத்தாலிய அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்தது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களை தயாரித்து வருகின்றன. இதன் விளம்பரம் ஒன்றில், ஐபோன் 4 மீட்டர் ஆழமுள்ள நீருக்குள் 30 நிமிடங்கள் வரை மூழ்கி இருந்தாலும், பாதிப்பு இருக்காது எனவும், தூய தண்ணீரில் மட்டுமே இது சாத்தியம் என்றும் கூறப்பட்டிருந்தது. அதேநேரத்தில், நீரால் பாதிப்பு ஏற்பட்டால் அது உத்தரவாதத்தின் ஒரு பகுதியில் வராது எனவும் கூறப்பட்டது. இது பெரும் மோசடி என்ற விமர்சனம் எழுந்தது. இதனையடுத்து இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், ஐபோன் பற்றிய தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ளதாக அந்நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்துள்ளது.

இத்தாலிய அமைப்பு இதுபோன்று அபராதம் விதிப்பது இது முதன்முறையல்ல. ஐபோனின் பேட்டரி பற்றிய தகவல்கள் உள்பட வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ளாதது போன்றவைகளுக்காக கடந்த காலங்களிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பேட்டரி விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள, ரூ.3,067 கோடி மதிப்பிலான தொகையை வழங்க ஆப்பிள் நிறுவனம் முன்வந்தது. அதன்பின்னர் ரூ.830 கோடி தொகையை வழங்கி சமரசம் செய்து கொண்டதால் அத்துடன் அந்த விவகாரம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE