புதுடில்லி :புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, ஒரு குழுவை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை ஏற்க, விவசாயிகள் மறுத்துள்ளனர். அதனால், முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. மீண்டும் நாளை பேச்சு தொடர உள்ளது.
இந்நிலையில், 'டில்லி எல்லையில் போராட்டம் தொடரும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள, வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லிக்கு பேரணி மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தஅனுமதி மறுக்கப்பட்டது.
ஆலோசனை
இதையடுத்து, ஹரியானா - டில்லி எல்லையில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள், ஆறாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'பிரச்னைக்கு தீர்வு காண, 3ம் தேதி பேச்சு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு நேற்று பேச்சில் ஈடுபட்டது.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், வர்த்தகத் துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் இந்த பேச்சில் ஈடுபட்டனர்.முன்னதாக, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர், பியுஷ் கோயல் மற்றும் பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினர்.விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சின்போது, விவசாயிகள் குறிப்பிடும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய, விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைக்க, மத்திய அரசு முன் வந்தது.
வலியுறுத்தல்
ஆனால், அதை விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஏற்கவில்லை. 'சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தினர்.தொடர்ந்து, மூன்று மணி நேரம் நடந்த பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, நாளை மீண்டும் பேச்சைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன. குறைந்தபட்ச ஆதாரவிலை நீக்கப்பட்டு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவில் நாங்கள் இருக்க நேரிடும்.அதனால், இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என, வலியுறுத்தியுள்ளோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கனடா பிரதமருக்கு கண்டனம்
வட அமெரிக்க நாடான கனடாவில், இந்தியர்கள் அதிகம் உள்ளனர். அதில் பெரும்பாலானோர், பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.குருநானக் தேவின், 551வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.மேலும், இந்தியாவை பூர்வீகமாக உடைய, கனடா வெளியுறவு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜனும், கருத்து தெரிவித்திருந்தார்.இது குறித்து, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:கனடா பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், சரியான தகவல்களை தெரிந்து கொள்ளாமல் கருத்து கூறியுள்ளனர். மேலும், ஒரு ஜனநாயக நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டுள்ளனர். இதற்கு, கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
'மாஜி' வீரர்கள் ஆதரவு
மத்திய அரசு வழங்கும் விருதுகளை பெற்ற முன்னாள் விளையாட்டு வீரர்கள் சிலர், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள விருதுகளை திருப்பி தரப் போவதாக கூறியுள்ளனர்.பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்றுள்ள, மல்யுத்த வீரர் கர்தார் சிங், அர்ஜுனா விருது பெற்றுள்ள கூடைப்பந்து வீரர், சஜ்ஜன் சிங் சீமா, அர்ஜுனா விருது பெற்றுள்ள ஹாக்கி வீரர் ராஜ்பிர் கவுர் ஆகியோர் இதை கூறியுள்ளனர்.'நாங்கள் விவசாயிகளின் குழந்தைகள். அமைதியாக போராடுபவர்கள் மீது, தண்ணீர் பீய்ச்சி அடிப்பது போன்ற அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகை முன், எங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பித் தர உள்ளோம்' என, அவர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE