லக்னோ:உத்தர பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபேக்கு உதவிய, 90 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, விசாரணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
'என்கவுன்டர்'உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில், பிரபல ரவுடி விகாஸ் துபேவை, ஜூலை, 2ல் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, ரவுடிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி, எட்டு போலீசாரை கொன்றனர்.அடுத்த சில நாட்களில், விகாஸ் துபேயை, 'என்கவுன்டரில்' போலீசார் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவங்கள் மற்றும் விகாஸ் துபேவின் கடந்த காலம் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் சஞ்சய்பூஸ் ரெட்டி தலைமையிலான குழுவை, மாநில அரசு அமைத்தது. இந்த குழு தீவிர விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: விகாஸ் துபே மீதான புகார்கள் மீது, போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை. விகாஸ் மற்றும் அவரது கும்பலை சேர்ந்தோர், போலி ஆவணங்களை பயன்படுத்தி, 'மொபைல் சிம், 'பாஸ்போர்ட்' ஆகியவற்றை பெற, அதிகாரிகள் உதவியுள்ளனர்.
விசாரணை
இந்த கும்பலுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள், உரிமத்துடன் கூடிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கிடைக்கவும், அவர்கள் வழி செய்துஉள்ளனர்.போலீஸ், வருவாய் துறைகளைச் சேர்ந்த, 90 அதிகாரிகள், விகாஸ் தலைமையில் ரவுடிகள் சாம்ராஜ்யம் உருவாக உதவி உள்ளனர். விகாஸ் துபேவுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு உதவியோர் என, அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும்.
விகாஸ் துபே மற்றும் அவரது கணக்காளர் பெயர்களில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்கள் உள்ளன. இதுகுறித்து அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE