வாஷிங்டன்:உலகெங்கும் நடக்கும்முக்கிய நிகழ்வுகள் குறித்து, அமெரிக்க அதிபருக்கு, ஒவ்வொரு நாளும் அளிக்கப்படும், தினசரி தகவல் சுருக்கக் குறிப்புகள், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள, ஜோ பைடனுக்கும் வழங்கும் நடைமுறை துவங்கிஉள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தலில், அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தாண்டு, ஜன., 20ல் அவர் பதவியேற்க உள்ளார்.இந்த தேர்தல் முடிவுகளை, அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்க மறுத்து வந்தார். நிர்வாக அதிகாரம் மாற்றும் நடவடிக்கைகளுக்கு, அவர் நீண்ட இழுபறிக்கு பின், சமீபத்தில் தான், ஒப்புதல் அளித்தார்.
அமெரிக்க அதிபருக்கு, ஒவ்வொரு நாளும் உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்த, உளவு துறையின் அதிரகசிய குறிப்புகள் அடங்கிய, சுருக்கக் குறிப்புகள் தரப்படும்.அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவருக்கும், இந்தத் தகவல்கள் பரிமாறப்பட வேண்டும். ஆனால், நிர்வாக மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்க டிரம்ப் தாமதம் செய்ததால், தகவல் சுருக்கக் குறிப்புகள் பகிர்ந்து கொள்ளப்படாமல் இருந்தது.
அதிபர் டிரம்பின் ஒப்புதலுடன், இந்தக் குறிப்புகள், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு நேற்று பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
ஐ.நா., பொதுச் செயலருடன் பேச்சு
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், ஐ.நா., பொதுச் செயலர் அனடோனியோ கட்டரஸ் உடன், தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.கொரோனா வைரஸ் பரவல், தடுப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசப்பட்டதாக, ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியர் நியமனத்துக்கு எதிர்ப்பு
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தன் நிர்வாகத்தின் பல்வேறு பதவிகளுக்கு நியமனங்களை அறிவித்து வருகிறார். நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனராக, இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது, கண்காணிப்பது இந்த துறையின் வேலை.
நீரா டான்டன் நியமனத்துக்கு, குடியரசு கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,யான ஜான் கார்ன்யின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''எம்.பி.,க்களை இழிவுபடுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் பலமுறை செய்திகளை வெளியிட்டுள்ளார். அவருக்கு இந்த பதவி அளிக்கக் கூடாது,'' என, கார்ன்யின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE