அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டு தோறும் ஜன., 26ல், நம் நாட்டின் குடியரசு தின விழா, டில்லியில் கோலாகலமாக நடக்கும். ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து, இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடக்கும். பல்வேறு மாநிலத்தவரும், அவர்களது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவர். மாணவ - மாணவியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடக்கும். விமானப்படையினரும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவர்.
நம் குடியரசு தின விழாவில், ஆண்டு தோறும் சிறப்பு விருந்தினர் பங்கேற்பது வழக்கம். இதன்படி, கடந்த குடியரசு தின விழாவில், தென்ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, அடுத்த மாதம் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகளில், 50 சதவீதம் குறைக்கப்படும் என,தெரிகிறது. பள்ளி மாணவர்களும் குறைந்த அளவிலேயே பங்கேற்கஉள்ளனர்.
ஆனாலும், நம் ராணுவத்தில் புதிதாக இணைந்துள்ள ரபேல் போர் விமானங்கள், குடியரசு தின விழாவில் முக்கிய பங்காற்ற உள்ளன. அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE