சென்னை:''ரஜினியுடனான என் போட்டி, அரசியலிலும் தொடரும்; அது பொறாமையாக இருக்காது,'' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.
நடிகர் கமலின் மக்கள் நீதி மைய கட்சியில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சந்தோஷ் பாபு, நேற்று இணைந்தார். இன்னும் எட்டு ஆண்டுகள் அரசுப் பணியாற்ற முடியும் என்றாலும், 'பாரத் நெட்' விவகாரத்தால் விருப்பு ஓய்வு பெற்றுள்ளார்.இது தொடர்பாக, கமல் விடுத்த அறிக்கை: தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு, அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர். ஊழலுக்கு எதிராக போராடியவர், மக்கள் சேவைக்காக கட்சியில் இணைந்துள்ளார், அவரை வரவேற்கிறோம்.
இவரைப் போன்ற நேர்மையானவர்களின் வருகை, கட்சிக்கு பலம் சேர்க்கும். சந்தோஷ்பாபுவை தலைமை அலுவலக பொதுச் செயலராக நியமிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.பின் நிருபர்களுக்கு கமல் அளித்த பேட்டி:
தேர்தல் பிரசார தேதியை சற்றே தள்ளி வைத்துள்ளோம். தமிழக அரசிடம் ஊழல் மலிந்துள்ளது. அதை மாற்ற வேண்டும்.ஊழலுக்கு எதிரான போராட்டம் என் வாழ்நாள் முழுதும் நடக்கும். தமிழக அரசின் மழை நிவாரணப்பணிகளில் திருப்தி இல்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.
வாழ்க்கையை முழுக்க எழுதி கொடுப்பதற்கும், கூட்டணி கொத்தடிமையாகவும், மக்கள் நீதி மையம் இருக்காது.விவசாயிகளின் போராட்டத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், மத்தியஅரசு, ரோம் மன்னர் பிடில் வாசித்தது போல, அலட்சியம் காட்டுவது நாட்டுக்கு நல்லதல்ல.நம்மை ஊழல் தாக்கிக் கொண்டிருக்கிறது. அது எங்கிருந்தாலும் மாற வேண்டும். அரசு பொறுப்பில் உள்ளவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் ஊழல் எங்கும் பரவுகிறது; அதை விரைவில் மாற்ற வேண்டும்.
நான் பிரசாரத்திற்கு செல்லும்போது, என் நண்பர் ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன். அவரது ஆரோக்கியத்தில், அவரது அரசியலை விட, எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது.ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்பதே என் முதல் எண்ணம். நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்த போது, போட்டியாளர்களாக மட்டுமே இருந்தோம்; பொறாமையாளர்களாக இருந்ததில்லை. அது, அரசியலிலும் தொடரும்.இவ்வாறு, கமல் கூறினார்.
'அரசு தாமதம்!'
கமல் கட்சியில் இணைந்த சந்தோஷ்பாபு கூறியதாவது:தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் வெளிநாட்டுக்காக செய்யும் வேலையை, நம் மக்களுக்காக, அரசுக்காக செய்யலாமே... நேர்மையான தலைமை வாயிலாக இதை சாத்தியப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நேர்மையான தலைவருக்காகவே, நான் இங்கு வந்தேன்.
வருமான வரியை உரிய முறையில் செலுத்தும் பொதுமக்கள், அரசு அலுவலகங்களுக்கு வராமலே, எந்த வசதியையும் பெற வேண்டும்.மக்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும், இணையதளம் வழியாக பெறக்கூடிய வசதிக்காகவே, மத்திய அரசை ஒன்பது முறை சந்தித்து, 'பாரத் நெட்' திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றேன்.இத்திட்டம் தமிழகத்தில் சற்று தாமதமானது; அதனாலேயே நான் வெளியே வந்தேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE