அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனசாட்சிப்படி மக்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்!

Added : டிச 01, 2020
Share
Advertisement
கடந்த, 1969 பிப்ரவரியில் அண்ணாதுரை மரணித்த பின், தி.மு.க.,வுக்கு கருணாநிதி தலைவரானார். அது முதல், தன் தலைமை பதவிக்கு போட்டியாக, யாரும் வரக் கூடாது என்பதில் குறியாக இருந்தார். அதன் தாக்கம் முதலில், எம்.ஜி. ஆர்., மீது இருந்ததால், இருவருக்கும் இடையே பனிப்போர் உருவானது.அதே ஆண்டு, திருக்கழுக்குன்றத்தில், செப்., மாதம் நடந்த கூட்டத்தில், 'ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, தி.மு.க., சொத்து

கடந்த, 1969 பிப்ரவரியில் அண்ணாதுரை மரணித்த பின், தி.மு.க.,வுக்கு கருணாநிதி தலைவரானார். அது முதல், தன் தலைமை பதவிக்கு போட்டியாக, யாரும் வரக் கூடாது என்பதில் குறியாக இருந்தார்.

அதன் தாக்கம் முதலில், எம்.ஜி. ஆர்., மீது இருந்ததால், இருவருக்கும் இடையே பனிப்போர் உருவானது.அதே ஆண்டு, திருக்கழுக்குன்றத்தில், செப்., மாதம் நடந்த கூட்டத்தில், 'ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, தி.மு.க., சொத்து சேர்த்து விட்டது என, எதிர்க்கட்சிகள் கூறுவதால், அதற்கு பதில் அளிக்கும் விதமாக, கட்சித் தலைவர்கள் தங்களின் சொத்துக் கணக்கை தர வேண்டும்' என, கட்சிப் பொருளாளரான, எம்.ஜி.ஆர்., கேட்டார்.

அப்போதே, 'எம்.ஜி.ஆர்., இருந்தால் தன் புது 'ஊழல்' கொள்கைக்கு சரிபட்டு வராது என்பதை கருணாநிதி தப்புக் கணக்கு போட்டார். தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., மீது பிற வேறு காரணங்களைக் கூறி, 'கட்சிக் கட்டுப்பாடுகளை மீறினார்' என்று கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கினார். 'மேலும், 20 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த பரிசு' என்ற வேதனை வார்த்தைகளுடன் வெளியேறிய எம்.ஜி.ஆர்., 1972ல் தன் அரசியல் குருவின் பெயரில், அ.தி.மு.க.,வை துவக்கி, வெற்றி மேல் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, 1977 முதல், 1987 வரை, 10 ஆண்டுகள் நல்ல ஆட்சி கொடுத்து, மக்கள் மத்தியில் என்றும் மறையாத மாபெரும் தலைவராக உருவெடுத்தார். அவர், 1987 டிச., 24ல் மறைந்தார். ஊழல் இல்லாத இரு ஆளுமைகள்திராவிடக் கட்சிகளில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகிய இரு பெரும் தலைவர்கள், அரசியல் வாழ்வில், ஊழல் அற்ற தலைவர்களாக இருந்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் மீது இன்றளவும், லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்ததில்லை.

ஆனால், இவர்களுக்கு பின்பு, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளில், கருணாநிதி முதல், ஜெ., வரை இருவரும், மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தாலும், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவர்களுக்கு ஈடான ஆட்சியை வழங்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஊழல் பெருச்சாளிகளுக்கு அவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து, அதில் இவர்களும் குளிர் காய்ந்ததாகும்.


வாக்காளர்களுக்கு என்ன விலை?

தொடர்ந்து, தேர்தல் காலங்களில், இரு கட்சித் தலைமைகளும், இலவசம் என்ற பெயரில், வாக்காளர்களுக்கு, அரிசி, மிக்சி, கிரைண்டர், இன்டெக் ஷன் ஸ்டவ், 'டிவி' என, பெரிய பட்டியலை போட்டி போட்டு வழங்கி, அவர்கள் எழ முடியாத மயக்கத்தில் விழச் செய்தனர். இதனால், தேர்தல் திருவிழாக்களில், 'காசு; பணம்; துட்டு; மணி... மணி' என்ற 'பார்முலாவை' வாக்காளர்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கினர்.

இந்த சூழ்நிலையில், 2016ல் டிச., மாதம் ஜெ.,வும்; 2018 ஆக., மாதம், கருணாநிதியும் மரணம் அடைந்தனர். இந்த நான்கு தலைவர்களில், 'ஊழல் அற்ற மற்றும் விஞ்ஞான ஊழல் செய்த' என, இரு வேறு பிம்பங்கள் இருந்தாலும், 1949 செப்., 17ல் அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டு, பின்பு, தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளாக மாறிய திராவிடக் கழகங்கள், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய வலுவான ஆளுமையின் கீழ் தமிழகத்தில், மத்திய அரசால் கூட அசைக்க முடியாத ஆட்சி பீடத்தில் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.


முதன் முதலாக தள்ளாடும் தலைமை

இந்நிலையில், 2021ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், தடுமாற்றமான தலைமைகளின் கீழ் தான், இரு திராவிடக் கழகங்களும் தேர்தலை சந்திக்கப் போகின்றன. 'கரிஸ்மாட்டிக் பர்சனாலட்டி' என்று கூறும், தலைமை இரு கழகங்களிலும் இல்லை.மேலும், அந்த நான்கு மாபெரும் தலைமையின் கீழ் நடந்த, அனல் பறக்கும் கூட்டங்களை, தற்போதைய அரசியல் தலைவர்களால் நிச்சயம் நடத்த முடியாது.

அதற்கு, 'கொரோனா' ஒரு காரணமாக இருந்தாலும், மக்களை ஈர்க்கும், அந்த தலைவர்களின் வார்த்தை ஜாலங்களை, இவர்களால் வெளிப்படுத்த முடியாது என்பதும் நிதர்சனம். ஆகையால் இந்த தேர்தலில், 'காசு, பணம், துட்டு, மணி' தான், வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுக்கான மறைமுக பிரசார ஆயுதமாக இருக்கும்.அதில், லஞ்சத்துடன் கூடிய அதிகார துஷ்பிரயோகம் என்ற இரு முகங்கள், நிச்சயம் களமாடும்.

அதற்கான ஆடுகளம், தமிழக சட்டசபை தொகுதிகளில் இப்போதே துவங்கி விட்டது. அதில், ஒரு கட்சியின் கிளை கழகத்துக்கு முதற்கட்டமாக, 'தீபாவளி போனஸ்' என, 5 முதல் 10 ஆயிரம் என்ற லஞ்சத்துடன், வினியோகம் துவக்கப்பட்டு விட்டது. இதன் முடிவு, ஏழை வாக்காளர்களிடம், 500 முதல், 1,000 ரூபாய் வரை கொடுத்து, வெற்றிலையில் சாமி பெயரைச் சொல்லி சத்தியம் வாங்கும் மோசடிகள் நடக்கும். இதற்கு எவ்வாறு தேர்தல் ஆணையம் 'கடிவாளம்' போடப் போகிறது என்று தெரியவில்லை.

தேர்தல் ஆணையம் தான் அதிகாரம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறதே. வழக்கம் போல, புகாரை வாங்கி மேலிடத்துக்கு அனுப்பி வைப்பதோடு அதன் வேலை முடிந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் விசாரணை நடந்தாலும், தீர்ப்பும் வராது; தண்டனையும் கிடையாது. மக்கள் தான், மனசாட்சிப்படி தீர்ப்பு வழங்க வேண்டும்!
- என்.மலையரசன், ஊட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X