சென்னை:''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, சமூக வலைதளங்களில், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், எதிர்கட்சிகள் செய்திகளை பரப்புவதாக, தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறு செய்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னையில் உள்ள, மாநில பேரிடர் மேலாண்மை நிலையத்தில், 'புரெவி' புயல் செல்லும் பாதை குறித்த வரைபடத்தை, அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டார். அதன்பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், புயல் கடக்க உள்ள மாவட்டங்களில், ஏரிகளின் நீர் இருப்பு விபரம், தினமும், 'tnsmart' மொபைல் ஆப் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் வழியாக, எந்தப் பகுதிகளில் மழைப் பொழிவு ஏற்படும்; எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மழை தொடர்பாக, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை, மக்கள் நம்ப வேண்டாம்.
மாற்று கருத்து உள்ளவர்கள், மாற்று கொள்கை கொண்டவர்கள், எதிர்க்கட்சிகள், சமூக வலை தளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், செய்திகளை பரப்பி வருவதாக, தகவல்கள் கிடைக்கின்றன.இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. அவதுாறு செய்திகளை பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE