சென்னை:புயல் மற்றும் கன மழை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, தென்மாவட்ட விவசாயிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை, வேளாண் துறை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் அறிக்கை:l சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பில் இருந்து, பாதுகாத்து கொள்ள வேண்டும். l திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, இஞ்சி போன்றவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், பயிர்களை காப்பீடு செய்வதற்கு, வரும், 15ம் தேதி கடைசி நாள்.
* விவசாயிகள், 15ம் தேதி வரை காத்திருக்காமல், முன்னதாகவே பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
* தென்னை மரங்களில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை அதிகம் இருந்தால், காற்றின் வேகத்தில் மரம் சாய்ந்து விழுவதற்கு வழிவகுக்கும். எனவே, இளம் ஓலைகளை தவிர்த்து, மற்றவற்றை வெட்டி அகற்ற வேண்டும்.
* புயல், மழையை எதிர்கொள்வதற்கு, நான்கு நாட்களுக்கு முன், தென்னந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.
* வாழை, மரவள்ளி, பப்பாளி, மா, பலா, முந்திரி, ரப்பர் மரங்களில், காற்று ஊடுருவி செல்லும் வகையில் பக்கவாட்டு கிளைகளையும், அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்ய வேண்டும்.
* கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண நோய் பரவாமல் தடுப்பதற்கு, 'காப்பர் ஆக்ஸி குளோரைடு' 1 லிட்டர் நீரில், 300 கிராம் கலந்த கலவையை பூச வேண்டும்.
* கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடைபருவ அறுவடைக்கு தயாராக இருக்கும், மா மரங்களில் அறுவடை செய்து, மரத்தின் சுமையை குறைக்க வேண்டும்.
* நெல், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களில், தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
* தொடர்ந்து மழை பெய்யும் நாட்களில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை, அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்குகளில், பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை பாதுகாக்க, போதிய தார்பாய்கள் இருப்பு வைக்க, பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
* இது குறித்த கூடுதல் தகவல்களை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE