சென்னை:கொரோனா தொற்றால் நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளாகி, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த, ராஜ்யசபா எம்.பி.,யும், குஜராத் மாநில பா.ஜ. மூத்த தலைவருமான அபய் பரத்வாஜ் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபய் பரத்வாஜ், 66. பா.ஜ., மூத்த தலைவரான இவர், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வந்தார். சமீபத்தில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில், கொரோனா பாதிப்பில் இருந்து அவர் விடுபட்டாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால், உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில், அக்., 9ல் அனுமதிக்கப் பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.
இதுகுறித்து, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பு: கொரோனா தொற்றால், ராஜ்யசபா எம்.பி.,யான அபய் பரத்வாஜின் நுரையீரல்கள், முழுமையாக பாதிக்கப் பட்டு இருந்தன. இதனால், உயிர் காக்கும் உயர் மருத்துவ சாதனங்களின் உதவியுடன், அவருக்கு இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவரது உடல்நிலை தொடர்ந்து பின்னடைவாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, 4:35 மணிக்கு பரத்வாஜ் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE