தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம் பெறுவதற்கான முயற்சியை, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் துவக்கி உள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தி அடைந்துள்ளார். அவர், காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கும் வியூகத்தை வகுத்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், வரும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 'காங்கிரசுக்கு நியாயமான முறையில், தொகுதிகளை தி.மு.க., தரும் என்ற நம்பிக்கை உள்ளது' என, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்., தலைவர் ராகுல், நேற்று முன்தினம், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.
அக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்காவிட்டால், மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து, காங்., வெளியேறினால், பா.ம.க., வை கூட்டணியில் சேர்த்து கொள்ளும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், திரைமறைவில் பேச்சை துவக்கி உள்ளார். இதையறிந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அதிருப்தியில் உள்ளார்.
தி.மு.க.,வில் இருந்து வெளியேறி, காங்., தலைமையில், மக்கள் நீதி மையம் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து, மூன்றாவது அணி அமைக்கவும், காங்., முன்னாள் தலைவர் ராகுலுடன் பேசி, வியூகம் அமைத்துள்ளதாகவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE