சென்னை:உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கும்படி கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட கட்சிகளில் பொறுப்புகள் வகிக்க கட்சி துவங்க தடை கோரியும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யா வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. எம்.பி. - எம்.எல்.ஏ. க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க உத்தரவிட்டது.மேலும் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை உயர் நீதிமன்றங்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றங்களிடம் இருந்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் வழக்கை விசாரணைக்கு எடுத்து பிறப்பித்த உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் 91; மதுரை கிளையில் 16 என 107 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஏற்கனவே அறிக்கை அளிக்கப்பட்டு விட்டது.
உயர் நீதிமன்றத்தில் 56 அவதுாறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை அளித்து தினசரி 10 வழக்குகள் வீதம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும். அதுகுறித்து பதிவாளர் அறிக்கை அளிக்க வேண்டும்.அவதுாறு வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகளை நீதிபதிகளின் வசதிக்கு ஏற்ப பட்டியலிட வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றபடுவதை கீழமை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து அந்த வழக்குகளின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பதிவாளர் ஜெனரலுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.விசாரணை ஜன. 5க்கு தள்ளி வைக்கப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE