தேனி அரசு பள்ளி மாணவிக்கு, அரசின், 7.5 சதவீத மருத்துவ உள்ஒதுக்கீட்டால் தனியார் கல்லுாரியில் 'சீட்' கிடைத்தும் பணம் கட்ட முடியாததால் வாய்ப்பை தவறவிட்டு அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் ஹைஸ்கூல் தெரு முருகேசன் மகள் மகேஷ்வரி. அல்லிநகரம் அரசு மேல்நிலை பள்ளியில், 2018ல் பிளஸ் 2 தேர்வில், 910 மதிப்பெண் பெற்றார். இந்த ஆண்டு 'நீட்' தேர்வில், 720க்கு, 159 மதிப்பெண் பெற்றார். அரசின், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் மருத்துவம் படிக்க மகேஷ்வரிக்கு வாய்ப்பு கிடைத்தது.
சென்னையில் நவ.19ல் நடந்த கலந்தாய்வில், எட்டு தனியார் கல்லுாரிகளில், 17 இடங்கள் காலியாக இருந்தன. அதில் சேர முதலாமாண்டில் லட்ச கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்றனர். ஏழை குடும்பம் என்பதால் அரசு கல்லுாரியில் 'சீட்' கிடைத்தால் படிக்கிறேன் என வெளியேறினார்.
மகேஷ்வரி கூறியதாவது: சலவை தொழிலாளியான என் தந்தையால் தனியார் கல்லுாரியில் பணம் கட்டி படிக்க வைக்க இயலாது. கலந்தாய்வில் பங்கேற்று வெளியேறிய சில நாட்களில் தனியார் மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்யும் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியானது. முன்னரே அறிவித்திருந்தால் நான் பயன் பெற்று இருப்பேன். மருத்துவம் படிக்க, அரசு எனக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். என்னை போல் வாய்ப்பை தவறவிட்டவர்கள் இருப்பர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இவருக்கு உதவ, 99427 34986 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE