திருப்புவனம்:திருப்புவனம் அருகே மாரநாடு கண்மாய் குடிமராமத்து பணியில்
முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்.
மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான மாரநாடு கண்மாய் 823 ஏக்கர் பரப்பளவுள்ளது, இதனை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. வெள்ளிக்குறிச்சி, ஆவரங்காடு , மாரநாடு,
சுள்ளங்குடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசன தேவையையும்
இக்கண்மாய் பூர்த்தி செய்கிறது.குடிமராமத்து திட்டத்தின் கீழ் 97 லட்ச ரூபாய்க்கு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்ததாக கூறி பொதுப்பணித்துறையினர் சார்பில் திட்டப்பலகையும் வைக்கப்பட்டது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வெள்ளிக்குறிச்சி மடை மழை காரணமாக சேதமடைந்துவிட்டது.
மடையின் பாதுபாப்பிற்காக பதிக்கப்பட்ட முண்டுகற்கள் சாதாரண மழைக்கே பெயர்ந்து
விட்டன.சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் தண்ணீர் வெளியேறும் மடைகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் வெளியேற வாய்ப்பில்லை என
விவசாயிகள் குற்றம் சாட்டினர்.சேதமடைந்த மடைகளை பார்வையிட பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அமுதா வந்த போது விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதம்
செய்தனர்.
விவசாயி மோகன் கூறுகையில் : குடிமராமத்து பணிகள் முழுமையாக செய்யவில்லை. பணிகள் முழுமையாக நடந்ததாக கூறி போர்டு வைத்த அதிகாரிகள் கலெக்டர் மாறிய உடன் போர்டை எடுத்து சென்று விட்டனர். வெறும் மண்ணை வைத்து மடைகளை கட்டியுள்ளனர். சாதாரண மழைக்கே மண் கரைந்து முண்டுகற்கள் சரிந்து விட்டன. தண்ணீர் இல்லாத போதே மடைகள் சேதமடைந்துள்ள நிலையில் கண்மாய் நிரம்பினால் மடைகள் இருக்கவே வாய்ப்பில்லை. தண்ணீரும்வெளியேற வாய்ப்பில்லை, என்றார்.
மாரநாடு சந்திரசேகர் கூறுகையில்: 97 லட்ச ரூபாய் பணியில் கண்மாயில் உள்ள மண்ணை எடுத்து கரையில் போட்டதுடன் சரி. கரையை பலப்படுத்தவோ, கெட்டிப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாதாரணமாக மடைகள் புதிதாக கட்டினால் பத்து ஆண்டு வரை உழைக்கும், ஆனால் பணிகள் முடிந்த ஒருசில நாட்களிலேயே மடைகள் சேதமடைந்துள்ளது, எனவே புதிய கலெக்டர் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வேண்டும், மீண்டும் தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE