தமிழகத்தில் லே-அவுட்களுக்கு அனுமதி பெறுவதே சிரமம் என்ற நிலையில், 'ரெரா' எனப்படும் ரியல் எஸ்டேட் வரன்முறை ஆணையத்தின் ஒப்புதல் பெற, மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாக கட்டுமானத் துறையினர் புலம்புகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலில் பொது மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் ரியல் எஸ்டேட் வரன்முறை ஆணையத்தை (ரெரா) மத்திய அரசு ஏற்படுத்தியது. பல்வேறு துறைகளிலும் தடையின்மைச் சான்று வாங்கவும், நகர ஊரமைப்புத்துறையிடம் திட்ட அனுமதி பெறவும் பல லட்சங்களைச் செலவழித்து, ஆண்டுக்கணக்கில் அலையும் புரமோட்டர்கள், 'ரெரா'வின் ஒப்புதலுக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
தமிழகம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளுக்கான 'ரெரா' அலுவலகம் சென்னையில் இயங்கிவருகிறது. மாதத்துக்கு 300க்கும் அதிகமான கோப்புகள், 'ரெரா' ஒப்புதலுக்கு வரும் நிலையில், அந்தக் கோப்புகளை சரி பார்ப்பதற்கு இரண்டே இரண்டு திட்ட உதவியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் பார்த்த பின், குழு உறுப்பினர்கள், குழுத் தலைவர், ஆணையத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் 'ரெரா நம்பர்' வழங்கப்படும்.
நிலம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம், கார் பார்க்கிங், பிராஜெக்ட்டுக்காகத் துவக்கப்படும் வங்கிக் கணக்கு இவற்றைச் சரி பார்த்து, நம்பர் வழங்குவது மட்டுமே 'ரெரா'வின் பிரதானப் பணி. ஆனால் இதற்கே பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள புரமோட்டர்கள், இந்த தாமதத்தால் லாபத்தை இழப்பதால், பொதுமக்களின் தலையில் விலையேற்றம் என்ற சுமையாக ஏற்றப்படுகிறது.
திட்ட உதவியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் இந்த தாமதம் தவிர்க்கப்படும்
என்று புரமோட்டர்கள் சிலர் கூறுகின்றனர். பெயர் சொல்ல விரும்பாத 'கிரடாய்' நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தற்போதுள்ள சேர்மன் ஞானதேசிகன் (தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்), தன் அலுவலகத்தில் லஞ்சம் நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதேநேரத்தில் கோப்புகள் தேங்கக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தி, விரைவாக ஒப்புதல் வழங்கினால் நன்றாயிருக்கும்' என்றார்.
-- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE