சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த தேதி விபரங்களை, விரைவாக அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர், கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. வரும், 7ம் தேதி முதல், இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தாமதமின்றி பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, தனியார் பள்ளிகள் சங்கத்தினர், முதல்வர் பழனிசாமிக்கு மனு அனுப்பியுள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு தேதி விபரங்களை, தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படும். அதனால், மாணவர்கள் முன்கூட்டியே திட்ட மிட்டு பாடங்களை படிப்பர். இந்த ஆண்டு கொரோனா பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பாடங்களுக்கு பொதுத் தேர்வில் வினாத்தாள் தயாரிக்கப்படும், குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் எவை, என்ற விபரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.
இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், வழக்கம் போல் மார்ச்சில் நடக்குமா அல்லது ஜூன், ஜூலைக்கு தள்ளி போகுமா என்ற விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, தமிழக அரசு உரிய முடிவு எடுத்து, முன் கூட்டியே தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE