சென்னை: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க.,வினர் நடத்திய போராட்டம் தொடர்பாக அக்கட்சி தலைவர் ஜிகே.மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் பா.ம.க., கட்சியினர் நேற்று (டிச.,01) முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்நாள் போராட்டத்தின்போது பஸ், ரயில்களை மறித்து பா.ம.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மீது கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் பஸ் மறியலால் நீண்ட தூரத்துக்கு போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. ஆம்புலன்சும் நெரிசலில் சிக்கியது.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தில் பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். கொரோனா சமயத்தில் அரசின் தடையை மீறி கூட்டமாக கூடியது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அன்புமணி ராமதாஸ் உள்பட 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் மறியல் மற்றும் ரயிலில் கல்வீசி தாக்கியது தொடர்பாக 350 பா.ம.க.,வினர் மீது ரயில்வே போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், ரயில்வே தண்டவாள பகுதியில் அத்துமீறி நுழைந்தது, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாம்பரத்தில் 150க்கும் அதிகமானோர் மீதும், பீர்க்கன்கரணை போலீஸ் நிலையத்தில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 3 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 78 இடங்களில் மறியல் மற்றும் போராட்டங்கள் நடந்தன. இது தொடர்பாக அந்தந்த பகுதியில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE