சென்னை: 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அதில் இடம் கிடைத்த சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியோ ஆகியோர் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். அப்போது , தனியார் கல்லூரிகளில் மட்டுமே அவர்களுக்கு இடம் கிடைத்தது. இதனால், அவற்றை தேர்வு செய்யவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அவர்களின் கட்டணத்தை அரசு ஏற்கும் என தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, மாணவிகள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கிடைத்த வாய்ப்பை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் சீட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை டிச.,11க்கு ஒத்திவைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE