புதுடில்லி: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அவர்களின் வருமானம் பாதியாக குறைக்கப்படுகிறது என காங்., எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லியில் 7வது நாளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக 35 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இன்றும் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நாளையும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியது தொடர்பான வீடியோவை காங்., எம்.பி., ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவர் பதிவிட்டுள்ளதாவது: விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அவர்கள் என்ன செய்கிறார்கள், தங்களது நண்பர்களின் வருவாயை நான்கு மடங்காக்குகிறார்கள். அதே வேளையில் விவசாயிகளின் வருவாய் பாதியாகக் குறைக்கப்படுகிறது. இந்த மத்திய அரசு, பொய் மற்றும் கொள்ளைக்காரர்களுக்கானது, சூட்டு கோட்டு போட்டவர்களுக்கானது. இவ்வாறு ராகுல் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE