கான்பரா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் தோற்ற இந்திய அணி 0-2 என தொடரை இழந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி போட்டி கான்பராவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு சுப்மன் கில் வாய்ப்பு பெற்றார். தவிர நவ்தீப் சைனி, முகமது ஷமி, சகாலுக்குப் பதில், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் இடம் பெற, தமிழகத்தின் நடராஜன், அறிமுக வாய்ப்பு பெற்றார்.

கோஹ்லி அரைசதம்
இந்திய அணிக்கு ஷிகர் தவான் (16), கில்(33) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் (19), ராகுல் (5) சீரான இடைவெளியில் வெளியேற, இந்திய அணி 123 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கோஹ்லி (63), 60வது அரைசதம் எட்டி நம்பிக்கை தந்தார்.பாண்ட்யா 6வது அரைசதம் அடித்தார். மறுபக்கம் ஜடேஜா, அபாட்டின் 48வது ஓவரில் 19 ரன்கள் எடுத்து, 13வது அரைசதம் எட்டினார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (66), பாண்ட்யா (92) அவுட்டாகாமல் இருந்தனர்.

நடராஜன் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், லபுசேன் ஜோடி துவக்கம் கொடுத்தது. நடராஜன் 'வேகத்தில்' லபுசேன் (7) போல்டானார். தன்பங்கிற்கு அசத்திய ஷர்துல் தாகூர், 'அபாய' ஸ்மித்தை 7 ரன்னுக்கு வெளியேற்றினார். அடுத்து ஹென்ரிக்சையும் (22) அவுட்டாக்கினார். பலமுறை தப்பிப்பிழைத்த பின்ச் (75), ஜடேஜா சுழலில் சிக்கினார். கிரீன் (21), கேரி (38) அவுட்டாக இந்திய அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் மேக்ஸ்வெல் 59 ரன் எடுக்க 'டென்ஷன்' ஏற்பட்டது. இவரை பும்ரா போல்டாக்க, மறுபக்கம் அபாட்டை (4), ஷர்துல் திருப்பி அனுப்பினார்.

நடராஜன் தன் பங்கிற்கு ஏகாரை (28) அவுட்டாக்கினார். கடைசியில் ஜாம்பா (4) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 289 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணிக்காக 'வேகத்தில்' மிரட்டிய ஷர்துல் தாகூர் 3, பும்ரா, நடராஜன் தலா 2 விக்கெட் சாய்த்தனர். இருப்பினும் தொடரை 1-2 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE