கேரளாவில் தாமரை மலருமா?
'சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், தலைப்பு செய்திகளில் இடம் பெறலாம் என, நினைத்து விட்டார் போலிருக்கிறது' என, கேரள மாநில, பா.ஜ., தலைவர், கே.சுரேந்திரனை கிண்டலடிக்கின்றனர், அந்த மாநில அரசியல்வாதிகள். சுரேந்திரன், கேரள மாநில, பா.ஜ., தலைவராக பதவியேற்றதிலிருந்தே, தடாலடியாக பேசி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தான், தலைவர் பதவியிலிருக்கும் போதே, கேரளாவில், பா.ஜ.,வுக்கு, ஏதாவது ஒரு தேர்தல் வெற்றியை பெற்றுத் தந்து விட வேண்டுமென துடியாய் துடிக்கிறார்.சமீபத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சுரேந்திரன், 'கேரளாவில், பா.ஜ., ஆட்சி அமைந்தால், தலைநகர் திருவனந்தபுரத்தை, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி போல மாற்றிக் காட்டுவேன்' என, முழங்கினார். இவரது பேச்சு பற்றிய தகவல், பத்திரிகைகளில் வெளியானதுமே, எதிர்க்கட்சியினர் இதை கிண்டலடித்து பிரசாரம் செய்தனர். திருவனந்தபுரத்தை விட, வாரணாசி எவ்வளவு பின் தங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில், சுரேந்திரனை கடுமையாக கிண்டலடித்தனர். சுரேந்திரன், இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'கூட்டத்தை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். இதை பெரிதுபடுத்தி, என்னை கிண்டலடிக்கின்றனர். மற்ற கட்சியினர் இப்படி பேசியதே இல்லையா' என, பொறுமுகிறார் சுரேந்திரன். பா.ஜ.,வினரோ, 'கேரளாவில், இன்னும் சில ஆண்டுகளில் தாமரை மலர்ந்தே தீரும். இப்போது எங்களை கிண்டலடித்தவர்கள், அப்போது மூக்கின் மேல் விரல் வைப்பர்' என, கொந்தளிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE