கூட்டி கழிச்சு கணக்கு பார்த்தால்...
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தொழில் வளர்ச்சி, சட்டம் - ஒழுங்கு பேணுதல், வேலை வாய்ப்பு, அன்னிய முதலீடு பெறுவது போன்ற பல காரணிகளை அடிப்படையாக வைத்து, ஆய்வு நடத்தியதில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, நாட்டிலேயே முதல் மாநிலமாக, தமிழகம் விளங்குகிறது என, 'இந்தியா டுடே' பத்திரிகை, நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விஷயம், என்ன தெரியுமோ?மூன்று ஆண்டுகளாக, இ.பி.எஸ்., தான் முதல்வராக இருக்கிறார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவிற்கு கிடைக்காத கவுரவம், இ.பி.எஸ்.,சுக்கு கிடைத்துள்ளது. இது பாராட்ட வேண்டிய விஷயம் தான்.வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் கடும் போட்டி ஏற்படும். அ.தி.மு.க.,விடம் இருந்து, ஆட்சியை பறிப்பது, அவ்வளவு எளிதல்ல.ஏனெனில், தி.மு.க., ஆட்சியில் நடந்த எதையும் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ஊழல் என, மக்கள் விரோத போக்கில் ஆட்சி செய்ததால் தான், தி.மு.க.,வை மக்கள் விரும்பவில்லை.
அதை மறைத்து, இ.பி.எஸ்., ஆட்சி மீது மட்டும் குறை சொல்லி பிரசாரம் செய்வதால், எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமே!மேலும், ஹிந்து விரோத போக்கை தொடர்ந்து, தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் கடைப்பிடித்து வருவதால், ஓட்டு வங்கி பெருமளவு சரிந்து வருகிறது.கூட்டி, கழிச்சு கணக்கு பார்த்தால், வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., வெற்றி பெறாது என்றே தோன்றுகிறது. 'கூடா நட்பு கேடாக முடிந்தது; சுரணை கெட்ட தமிழர்கள்' என, வசை பாடி, கருணாநிதி வயித்தெரிச்சலைத் தணித்துக் கொண்டதை போல, அவரது மகன் ஸ்டாலினும் ஏதாவது புலம்புவார்.
அவர்கள் என்ன பாவம் செய்தனர்?
டாக்டர் எல்.சுஜாதா, கள்ளக்குறிச்சியிலிருந்து எழுதுகிறார்: அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்த, 7.5 சதவீத உள் ஒதுக்கீடால், தனியார் பள்ளி மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்துள்ளனர்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், தங்கள் குழந்தைக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடன் பட்டாவது, தனியார் பள்ளியில் அவர்களை சேர்க்கின்றனர்.விளையாட்டு, பொழுது போக்கு, உணவு, உறக்கம் என, பலவற்றை தியாகம் செய்து, மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு, மாணவர்கள் படிக்கின்றனர்.பெற்றோரின் தியாகத்தையும், மாணவர்களின் உழைப்பையும், இந்த உள்ஒதுக்கீடு பழிவாங்கி உள்ளது. அவர்கள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
'நீட்' தேர்வில், 700க்கு, 200 மதிப்பெண் பெற்றவருக்கு, மருத்துவக் கல்லுாரியில், 'சீட்' கிடைக்க, தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு படித்து, 500 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது, அநீதி தானே!தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் எல்லாம், வசதியானோர் அல்ல; கடன் வாங்கித் தான், அங்கு படிக்க வைக்கின்றனர். அதற்கு காரணம், அரசுப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கவில்லை என்பதே.நீட் தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்றும், மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அந்த மாணவர் மற்றும் பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை, தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் உழைப்பிற்கு மதிப்பளியுங்கள்.இந்த மாணவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட, 'டாக்டர்' கனவிற்கு பதில் சொல்லுங்கள்.
அதில் என்ன தவறு?
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு, ஆளுங்கட்சி கொடுத்த வரவேற்பை கண்டு, இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'அ.தி.மு.க., இன்று, பா.ஜ.,வின் பிடியில் இருப்பது, அப்பட்டமாக வெளியே வந்துள்ளது' என, தெரிவித்துள்ளார்கடந்த, 1975ல், பிரதமராக இருந்த இந்திரா, ஊழலை காரணம் காட்டி, தமிழகத்தில் இருந்த, தி.மு.க., ஆட்சியை, 'டிஸ்மிஸ்' செய்தார். மேலும், 'எமர்ஜென்சி' அறிவித்து, கருணாநிதியை சிறையில் அடைத்தார்.அதன்பின், 1977ல் நடந்த தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஆட்சியை பிடித்தார். இப்போது, கருணாநிதியோடு கூட்டணி அமைத்த இந்திரா, 1980ல், எம்.ஜி.ஆர்., ஆட்சியை, 'டிஸ்மிஸ்' செய்தார்.
ஆனால், அதை தொடர்ந்து நடந்த சட்டசபைத் தேர்தலில், அமோக வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்., மீண்டும் ஆட்சி அமைத்தார்.கடந்த, 1987-ல், எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜானகி - ஜெயலலிதா என, இரண்டு அணியாக, அ.தி.மு.க., பிரிந்தது. ஜெயலலிதாவோடு, அன்றைய பிரதமர் ராஜிவ் கூட்டணி அமைத்து, ஜானகியின் ஆட்சியை, 'டிஸ்மிஸ்' செய்தார்.ராஜிவ், ஜெயலலிதா ஆகியோர் ஆதரவுடன், பிரதமரான சந்திரசேகர், நீண்ட ஆண்டுகளுக்கு பின், தமிழக முதல்வரான கருணாநிதியின் ஆட்சியை, டிஸ்மிஸ் செய்தார்.அதன்பின், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி, ஆட்சியை அமைத்தன.மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும், பா.ஜ., 2016ல், முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழக அரசியலில் குட்டி கலகம் செய்து, ஆட்சியை கலைக்கவில்லை. மாறாக, அ.தி.மு.க.,வில் வெவ்வேறு திசையில் சென்ற, இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்.,சை ஒன்றாக இணைத்தனர்.
நான்கு ஆண்டுகளாக, அ.தி.மு.க., அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதற்கு காரணம், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு தான்.இதைவிட முக்கியமான விஷயம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று கூடி, சசிகலாவை முதல்வராக்கிய தினமே, நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கை துாசி தட்டி, அவரை சிறைக்கு அனுப்பியது, மத்திய அரசு. இதன் மூலம், தமிழகத்தையே காப்பாற்றியது.மக்கள் செல்வாக்கு படைத்த, அரசியல் ஜாம்பவான்களான, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், பல சந்தர்ப்பங்களில், மத்திய அரசுக்கு பணிந்து, அடக்கியே வாசித்துள்ளனர்.இக்கட்டான நேரத்தில் ஆட்சியை காப்பாற்றிய, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசுக்கு பணிந்து போவதில், தவறு ஒன்றும் இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE