அரசியல்வாதிகளை தேடி ஓடும் ஐ.பி.எஸ்.,கள்!
''நிரந்தர அதிகாரி இல்லாம, நிர்வாகம் தள்ளாடிட்டு இருக்குது பா...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மதுரை, அலங்காநல்லுார்ல தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்குது... இங்க ஏற்கனவே, நிர்வாக இயக்குனர்களா இருந்தவங்களின் தவறான நிர்வாகத்தால, விவசாயிகளுக்கு நிலுவை தொகை அதிகமா தேங்கிடுச்சு பா...
''இதனால, விவசாயிகள் வெறுத்து போய், கரும்பு பயிரிடுவதையே குறைச்சுட்டாங்க... ஆலையும் சரியா செயல்படலை... இந்த சூழல்ல, நிர்வாக இயக்குனரா வந்த செந்தில்குமாரி, கரும்பு பயிரிடுற பரப்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்தாங்க பா...
''ஆனா, அவங்களையும், மதுரை மாவட்ட வருவாய் அலுவலரா மாத்திட்டாங்க... இப்போதைக்கு, நாமக்கல் மாவட்டம், மோகனுார் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் தான், கூடுதல் பொறுப்பா இந்த ஆலையையும் பார்த்துட்டு இருக்காரு பா...
''அவரும் எப்பவாவது தான் அலங்காநல்லுார் வர்றார்... இதனால, கரும்பு பயிரிடும் பரப்பை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு பாக்கி பட்டுவாடா செய்றது போன்ற பணிகள் கிடப்புல போயிடுச்சு... 'இங்க நிரந்தர நிர்வாக இயக்குனரை நியமிக்கணும்'னு, விவசாயிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சமீபத்துல, சென்னைக்கு வந்துட்டு போன அமித் ஷாவை பார்த்த இருவர் கதையை கேளுங்க வே...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அமித் ஷாவை, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பார்த்து, 'நீங்க தான் இரண்டாம் இரும்பு மனிதர்... இந்த புத்தகம் உங்களுக்கு பொருத்தமானது'ன்னு சொல்லி, 'தி மேன் ஹூ சேவ்டு இந்தியா'ங்கிற புத்தகத்தை குடுத்திருக்காரு வே...
''மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சென்குப்தா எழுதிய அந்த புத்தகம், இந்தியா சுதந்திரம் அடைந்த பின், சமஸ்தானங்களை சர்தார் வல்லபபாய் படேல் இணைத்து, நாட்டை வலிமைப்படுத்திய வரலாறு பற்றியது...
''அதே மாதிரி, அமித்ஷாவை, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியும் பார்த்திருக்காரு... அப்ப அவரிடம், வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தை, தமிழக ஊரகப் பகுதிகள்ல சிறப்பா செயல்படுத்தியதா, அமித் ஷா பாராட்டியிருக்காரு வே...'' என்றார்,
அண்ணாச்சி.
''அரசியல்வாதிகளை தேடி படையெடுத்துண்டு இருக்கா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் குப்பண்ணா.
''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கறதுக்கு முன்னாடி, போலீஸ் அதிகாரிகள் இடமாற்ற பட்டியலை, தேர்தல் கமிஷனுக்கு தரணும்... இதுக்காக, காலி பணியிட பட்டியலை, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்களிடம், சமீபத்துல கேட்டு வாங்கியிருக்கா ஓய்...
''இதனால, எஸ்.ஐ., துவங்கி, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி.,- ஏன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பலரும், தங்களுக்கு தோதான இடங்கள்ல பணியிடம் கேட்டு, அந்தந்த பகுதி அமைச்சர், ஆளுங்கட்சி மாவட்டச் செயலர், முதல்வருக்கு நெருக்கமானவாளை தேடி ஓடிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.அரட்டை முடிய, பெஞ்ச் மவுனித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE