புதுடில்லி:மத்திய அரசின் பல்வேறு கண்காணிப்பு முறைகள், தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளதாகக் கூறி, டில்லி உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
பொதுநலன் வழக்குகள் மையம், கம்ப்யூட்டர் மென்பொருள் சுதந்திர சட்ட மையம் ஆகிய அமைப்புகள் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:பயங்கரவாதத்தை தடுக்க, பொருளாதார குற்றங்களை கண்டுபிடிக்க, சைபர் குற்றங்களை தடுக்க, பல்வேறு கண்காணிப்பு முறைகளை, மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.
சி.எம்.எஸ்., எனப்படும் மைய கண்காணிப்பு முறை; டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள, 'நேட்கிரிட்' என்ற பயங்கரவாத தடுப்பு கண்காணிப்பு முறை ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.இவற்றின் மூலம், ஒருவரின் சமூக வலைதளம், இ - மெயில், வங்கி கணக்கு, வரி கணக்கு, விசா, மொபைல் போன் என எதையும் கண்காணித்து தகவலைப் பெற முடியும்.
இது தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது. மேலும், தற்போதுள்ள சட்டங்களால், இந்த கண்காணிப்பு முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதனால், இந்த முறைகளை பயன்படுத்துவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசின் உள்துறை, தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, ராணுவம், சட்ட அமைச்சகங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, அடுத்தாண்டு, ஜன., 7க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE