புதுடில்லி:முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீதான, 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேடு வழக்கில், விசாரணை தாமதமாவதற்காக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு கெடு விதித்தார்.
காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பதவி வகித்தார்.அப்போது, தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்த, 'மேக்சிஸ்' மற்றும் தமிழகத்தை சேர்ந்த 'ஏர்செல்' நிறுவனங்களுக்கு இடையே, வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.இதில், அன்னிய முதலீடு பெறப்பட்டதில், விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியுடன், அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தில் முறைகேடாக அனுமதி பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன. இதன் விசாரணையை, மூன்று மாதங்களுக்குள் முடிக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு, டில்லி நீதிமன்றம் கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில்நடந்தது.
அப்போது, சி.பி.ஐ., மற்றும் அமலாகத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'ஐரோப்பிய நாடான, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த அதிகாரிகளிடம், இந்த வழக்கு தொடர்பாக, சில தகவல்கள் கேட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளோம். 'இதுவரை, தகவல்கள் கிடைக்காத நிலையில், விசாரணையை முடிக்க, கால அவகாசம் தேவை' என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நீதிபதி உத்தரவிட்டதாவது:இந்த வழக்கு விசாரணை முடியாமல் காலதாமதம் ஆகிறது. விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறைக்கு இல்லையா என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதன் விசாரணையை முடிக்க, மேலும் இரண்டு மாத, அவகாசம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி, 1ல் நடக்கும் விசாரணையின் போது, மேலும், கால அவகாசம் கேட்க கூடாது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE