புதுடில்லி:இணைய பாதுகாப்பு குறித்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும், இது தொடர்பான பாடத் திட்டத்தை உருவாக்க, கல்வியாளர்களை ஊக்குவிக்குமாறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதலே, உலகம் முழுதும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதன் காரணமாக, 'ஆன்லைனில்' மாணவர்கள் செலவழிக்கும் நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, 'இணையத்தில் எளிதாக கிடைக்கக் கூடிய, பாலியல் மற்றும் வன்முறை ரீதியிலான உள்ளடக்கங்கள் மாணவர்களை பெரிதும் பாதிக்கக்கூடும்' என, யுனிசெப் எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியம் கவலை தெரிவித்தது.
இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகள் மற்றும் உயர் கல்வி நிலையங்களுக்கு, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைக்கழக மானிய குழு, கடிதம் ஒன்றை அனுப்பிஉள்ளது.அதில், யு.ஜி.சி.,யின், செயலர், ரஜினிஷ் ஜெயில் குறிப்பிட்டுள்ளதாவது:இணையவெளியில் தெரிந்தோ, தெரியாமலோ, மாணவர்கள் பல ஆபத்தான உள்ளடக்கங்களை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது.
இதையடுத்து, இணைய பாதுகாப்பு குறித்து, பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இணைய வழி குற்றங்களை தவிர்ப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பாடத் திட்டங்களை, உயர் கல்வி நிலையங்களில் வகுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE