சென்னை :வங்கக்கடலில் உருவான, புரெவி புயல், நாளை அதிகாலை, பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று இரவு முதல், சூறாவளி காற்று வீசும்; கன மழை கொட்டும் என்பதால், ஆறு மாவட்டங்களுக்கு, 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம், புரெவி புயலாக மாறியது. இந்த புயல் கரை கடக்கும் நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் நேற்று அளித்த பேட்டி: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த, புரெவி புயல், தற்போது, பாம்பனுக்கு கிழக்கு - தென் கிழக்கே, 370 கி.மீ., தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு - வடகிழக்கே, 550 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது, மணிக்கு 25 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. சற்றே வேகம் குறைந்தாலும், மேலும், மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, இரவில் இலங்கையில் கரையை கடக்கும். இதையடுத்து, இன்று பகலில், மன்னார் வளைகுடாவில் கரையை கடந்து, பாம்பனில் நிலை கொள்ளும். தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள், பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும். இதன் தாக்கம், ராமநாதபுரத்தில் துவங்கி, கன்னியாகுமரி வரை படிப்படியாக அதிகரிக்கும். இதன் காரணமாக மணிக்கு, 90 கி.மீ., வேகம் வரை, சூறாவளி காற்று வீசும்; கனமழை முதல் அதீத கன மழை வரை பெய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.
சூறாவளி வீசும்
இன்று, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல், அதீத கன மழை வரை பெய்யும். அதாவது, 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும். மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த மாவட்டங்களுக்கு, 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், கன முதல் மிக கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நாளை, தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும். நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை மறுநாள், டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.
சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 30; குறைந்தபட்சம், 22 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புரெவியின் பொருள் என்ன?
புயலுக்கு வைக்கப்பட்டுள்ள, புரெவி என்ற பெயர், மாலத்தீவு நாட்டில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. திவேஹி மொழியில், சதுப்பு நில தாவரம், கருப்பு சதுப்பு நிலம் என்றும், சதுப்பு நில ஆப்பிள் என்றும், பலவாறாக கூறப்படுகிறது. புரெவி என்றால், சதுப்பு நில ஆப்பிள் என்ற அர்த்தம் காணப்படுவதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து வழக்கமாக, காலை, 8:35, 11:35 மற்றும் பகல், 1:00 மணி என, மூன்று விமானங்கள் துாத்துக்குடிக்கு இயக்கப்படுகின்றன. நேற்று காலை, 8:35 மற்றும், 11:35 மணி விமானங்கள் வழக்கம் போல புறப்பட்டு சென்றன. ஆனால், பகல், 1:00 மணிக்கு, துாத்துக்குடிக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல, துாத்துக்குடியில் இருந்து பகல், 12:20 மற்றும், 3:20 மணிக்கு, சென்னைக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
சென்னையில் இருந்து பகல், 11:30க்கு, கொச்சி செல்லும் விமானம் மற்றும் அங்கிருந்து பிற்பகல், 2:35 மணிக்கு, சென்னை வர வேண்டிய விமானமும், நேற்று ரத்து செய்யப்பட்டது.
'இந்த விமானங்களின் சேவைகள், புரெவி புயல் தாக்குதல் அபாயம் காரணமாக, ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து, இன்று தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்கள், சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் நிலவும் பருவ நிலைக்கு ஏற்ப இயக்கப்படும்' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் அமைச்சர் ஆய்வு
புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், நேற்று ராமேஸ்வரத்தில், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் உள்ள புயல் காப்பகத்தில், உணவு பொருட்களை ஆய்வு செய்தார். பாம்பன் பாலத்தில் நின்றபடி, படகுகளை பார்வையிட்டார். பின், உதயகுமார் அளித்த பேட்டி:முதல்வரின் முன்னெச்சரிக்கையால், ஒக்கி, கஜா, நிவர் புயலில் இருந்து, மக்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டனர். புரெவி புயலை ஒட்டி, தேசிய பேரிடர் மீட்பு குழு, காவல், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டாம்.
துாத்துக்குடி, கன்னியாகுமரியில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற, மீனவர்கள் திரும்பி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கோவிலில், மூடி கிடக்கும் புனித தீர்த்த கிணறுகளை திறப்பது குறித்து, முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE