ராமேஸ்வரம் : புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் சூறாவளியுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புரெவி புயல்
வங்க கடலில் உருவான புரெவி புயல் டிச.,4ல் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்கிறது. தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல், மழையை எதிர்கொள்ள ராமநாதபுரம், நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்கள், தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. கடல் கொந்தளிப்பால் 6 முதல் 8 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மிதமான மழை பெய்தது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் அருகே புயல் கரை கடப்பதால் பாம்பன், ராமேஸ்வரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

துாத்துக்குடி
துாத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகள், 8 கட்டுமரங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். 8 பேர் மட்டும் திரும்ப வேண்டியுள்ளது. துாத்துக்குடி துறைமுகத்தில் நேற்று 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. துாத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவிற்கு நேற்று விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கன்னியாகுமரி
குமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. விவேகானந்தர் பாறை படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் செல்லவும், கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 75 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடலுக்கு சென்ற 153 படகுகள் கரை திரும்பவில்லை. அதில் சுமார் ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். அவர்களை செயற்கைக்கோள் போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி நடக்கிறது. வேறு மாநில துறைமுகங்களில் கரை ஒதுங்கினால் உதவி செய்ய உத்தரவிடப்பட்டள்ளது. நேற்று அடிக்கடி சாரல் மழை பெய்தது. தேசிய பேரிடர் நிவாரண படையினரின் மூன்று பிரிவு வீரர்கள் கன்னியாகுமரி மற்றும் குளச்சலில் முகாமிட்டுள்ளனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தமட்டில் மாவட்ட பருவமழை கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் நேற்று கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விஜயநாராயணம் குளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 57 பேர் மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை பார்வையிட்டனர்.தென்காசியில் கலெக்டர் சமீரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனுஜார்ஜ் ஆகியோர் மீட்பு குழுவுடன் தயார் நிலையில் உள்ளனர்.-----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE