சென்னை:அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்த முடியாததால், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு, மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரநாதன்பேட்டையை சேர்ந்த சித்ரா என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகள் தர்ஷினி, பிளஸ் 2வில், 488 மதிப்பெண்; 'நீட்' தேர்வில், 175 மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தார். நவ., 19ம் தேதி நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றார். தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடம் ஒதுக்குவதாகவும், ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியது வரும் எனவும் தெரிவித்தனர்.
எங்கள் நிதி நிலைமை சரியில்லாததால், காத்திருப்போர் பட்டியலில் வைத்தனர்.நவ., 20ம் தேதி, அனைத்து தனியார் மருத்துவ கல்லுாரிகளின் முதல்வர்களுக்கும், மருத்துவ கல்வி இயக்குனர் அனுப்பிய கடிதத்தில், கல்வி கட்டணத்தை வற்புறுத்தாமல், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வரும் மாணவர்களை சேர்க்கும்படி கூறப்பட்டது.என் மகள் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மறுநாள், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகுதி இருந்தும், 7.5 சதவீத ஒதுக்கீட்டு சலுகையை, என் மகளால் பெற முடியவில்லை.
ஒரு இடத்தை காலியாக வைக்காமல், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இடங்களை நிரப்ப தடை விதிக்க வேண்டும். மருத்துவ படிப்பில், என் மகளுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த மாணவி இலக்கியா சார்பில், அவரதுதாய் ராஜலட்சுமி என்பவர், மனு தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தன.மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.''இவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மறுநாள், கட்டணத்தை அரசு செலுத்தும் என, அறிவிப்பு வந்தது.
இந்த அறிவிப்பு, மனுதாரர்கள் போன்றவர்களுக்கும் பொருந்த வேண்டும்,'' என்றார்.அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''மனுதாரர்களைப் போன்றவர்களுக்கு இடங்கள் ஒதுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார். இதையடுத்து, விசாரணையை, வரும், 11க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE