சென்னை:சட்டவிரோத போராட்டங்கள் நடத்த, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்துக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த மனு:பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, டிச., 1ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் தொடர்கிறது. ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் பாதை, சாலைகளில் தடுப்புகளை அமைத்து, இடையூறு ஏற்படுத்தினர்.
தனியார், பொது சொத்துக்களை, கல் வீசி சேதப்படுத்தினர். விதிமுறைகளை, இவர்கள் பின்பற்ற வில்லை. விமான நிலையம் செல்ல, வெளிநாட்டு பயணியர் உள்ளிட்டோர் சிரமப்பட்டனர். பொது மக்கள், அலுவலகம் செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.சட்ட விரோதமாக போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுப்பதற்கு பதில், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர்; அவர்களுடன் பேச்சு நடத்துகின்றனர்.
போராட்டத்தை தொடர்ந்து அனுமதித்தால், மாநில அரசின்செயல்பாடுகளில் முடக்கம் ஏற்படும்.எனவே, சட்டவிரோதமாக போராட்டம் நடத்த, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்துக்கு தடை விதிக்க வேண்டும். போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும், போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
நேற்று காலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் தாக்கல் செய்த வழக்கை, அவசரமாக விசாரிக்க கோரி, வாராகி சார்பில் முறையிடப்பட்டது.இந்த வழக்கில், பா.ம.க.,வின் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டால், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி உட்பட பலர், வழக்கில் சிக்கும் நிலை ஏற்படும். அதனால், அவர்கள் போராட்டத்தை தவிர்க்க வேண்டிய நிலைமை உருவாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE