சென்னை:'புரெவி' புயலானது, மற்ற புயல்களை விட வித்தியாசமாக, மூன்று முறை கரை கடக்க உள்ளது. புயலால், 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக, சென்னை, கடலுார், நாகை, எண்ணுார், காட்டுப்பள்ளி, குளச்சல், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில், 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்குள் புயல் மையம் கொண்டுள்ளதை எச்சரிக்க, இந்த சிக்னல் அறிவிக்கப்படுகிறது.பாம்பன், ராமேஸ்வரம் துறைமுகங்களில், புயலின் அபாயத்தை குறிப்பிடும், 7ம் எண் கூண்டும்; துாத்துக்குடியில், 6ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, குமரி கடல், தமிழகத்தின் தென் கடலோர பகுதிகள், தெற்கு கேரளா கடற்பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு, தென் கிழக்கு அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு, மீனவர்கள் இன்றும், நாளையும் செல்ல வேண்டாம். தமிழகம், கேரளாவை ஒட்டிய கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும். வட கடலோர மாவட்டத்தை ஒட்டி, நாளை மாலை வரை, 4.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்.தென் மாவட்டங்களில், 4 மீட்டர் வரை; வடக்கு, தெற்கு ஆந்திரா, கேரளா, லட்சத்தீவு பகுதிகளில், 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மூன்று முறை
பெரும்பாலான புயல்கள், கடலில் இருந்து ஒரு முறை மட்டுமே கரை கடக்கும். அதாவது, கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் நுழையும். ஆனால், இந்த புரெவி புயலானது, மூன்று முறை கரை கடக்கும் நிகழ்வுகளை அரங்கேற்ற உள்ளது.அதாவது, இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையில் நகர்ந்து, முதலில் திரிகோணமலை அருகே, இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழைகிறது.
இலங்கையின் திரிகோணமலை மற்றும் தலைமன்னார் இடையிலான நிலப்பகுதியை கடந்து, மீண்டும் கடலுக்குள் நுழைகிறது. பின், பாக் ஜலசந்தி உள்ள மன்னார் வளைகுடாவில் கரை கடந்து, பாம்பன் அருகே நிலப்பகுதிக்குள் நுழைகிறது. அங்கிருந்து மீண்டும் கடல் பகுதிக்குள் நுழைந்து, கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே, துாத்துக்குடி அருகே கரை கடக்க உள்ளது. இந்த வகையில், மற்ற புயல்களை விட, புரெவி புயல் வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE