ஆனைமலை : ஆனைமலை ஒன்றியத்தில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்த மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நாடு முழுவதிலும் அனைத்து வீடுகளிலும், சுத்தமான, போதிய அளவு குடிநீர் வழங்க, 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனைமலை ஒன்றியத்துக்கு, இத்திட்டத்தில், சுப்பேகவுண்டன்புதுார், ரமணமுதலிபுதுார், ஜல்லிபட்டி, சோமந்துரை ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சுப்பேகவுண்டன்புதுாரில் மட்டுமே, திட்ட பணிகள் முறையாக நடந்து வருகிறது. ரமணமுதலிபுதுார், ஜல்லிபட்டி, சோமந்துரை ஆகிய ஊராட்சிகளில் முடங்கியுள்ளது. இதனால், புதியதாக குடிநீர் இணைப்பு பெறமுடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:ரமணமுதலிபுதுார், ஜல்லிபட்டி, சோமந்துரை ஆகிய ஊராட்சிகளில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்ட பணிகளை டெண்டர் எடுத்தவர்கள், வட்டக்கிணறு, தொட்டிகள் அமைப்பது என, திட்டத்தின் அனைத்து பணிகளையும், ஆமை வேகத்தில் செய்து வருகின்றனர்.இது குறித்து மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இத்திட்டத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்க, விண்ணப்பத்துடன், ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை, ஓராண்டுக்கான குடிநீர் கட்டணம், 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படாமல் உள்ளதால், புதிய இணைப்புக்காக விண்ணப்பம் பெற்ற மக்களுக்கு, ஆறு மாதங்களாக குடிநீர் இணைப்பு வழங்க முடியாத நிலை நீடிக்கிறது. திட்ட பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE