அன்னுார் : திருப்பூர் மாவட்டத்திலிருந்து பிரித்து, கோவை மாவட்டத்தில் சேர்க்க கோரி, பொங்கலுார் ஊராட்சி மக்கள் 11 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கோவை மாவட்டத்திலிருந்து, 2009, பிப்ரவரியில், திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவானது. அப்போது, அவிநாசி தாலுகாவிலிருந்த, அன்னுார் ஒன்றியம், கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம், திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. புதிய மாவட்டம் பிரித்தபோது, அன்னுாரை ஒட்டியுள்ள, பொங்கலுார் ஊராட்சி மக்கள் தங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி கோரினர். எனினும் திருப்பூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. இதனால் 11 ஆண்டுகளாக, கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பொங்கலுார் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோவையிலிருந்து சத்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அன்னுாரிலிருந்து, எட்டாவது கிலோ மீட்டரில் பொங்கலுார் உள்ளது. இந்த ஊராட்சியில், பொங்கலுார், தாசராபாளையம், அய்யப்ப நாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், திம்ம நாயக்கன்புதுார், பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஒன்பது ஊர்கள் உள்ளன. 6,000 பேர் வசிக்கின்றனர். மொண்டிபாளையம், வெங்கடேசப்பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில்தான் உள்ளது.பொங்கலுார் ஊராட்சி தலைவர் விமலா கூறுகையில், ''இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.
இது குறித்து பொங்கலுார் மக்கள் கூறியதாவது:பொங்கலுார், கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. வியாபாரம், கல்வி, சாலை மார்க்கம் என அனைத்து விஷயங்களிலும் இப்பகுதி மக்கள் கோவையை சார்ந்து உள்ளனர். இப்பகுதி மக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவற்றுக்கு திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசிக்கு செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு சேவூர் செல்கின்றனர்.போலீஸ் ஸ்டேஷன் செல்ல இங்கிருந்து எட்டு கி.மீ., தொலைவிலுள்ள புளியம்பட்டி சென்று அங்கிருந்து வேறு பஸ் மாறி செல்ல 20 கி.மீ., துாரம் ஆகிறது. அதே போல், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று பஸ்கள் மாறி, 25 கி.மீ., செல்ல வேண்டி உள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் செல்ல, அன்னுார் வந்து, அங்கிருந்து திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து டவுன்பஸ் பிடித்து, 50 கி.மீ., துாரம் செல்ல வேண்டும். ஆனால் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இரண்டு பஸ் மாறினால் போதும்.உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு கோவை மாவட்டத்திலுள்ள பசூர் மற்றும் அன்னுார் செல்கிறோம். பத்திரப்பதிவு செய்ய அன்னுார் சார் பதிவாளர் அலுவலகம் செல்கிறோம்.
ஆனால் வருவாய் துறை, காவல் துறைக்கு திருப்பூர் மாவட்டம் செல்ல வேண்டி உள்ளது. எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்கும்படி, ஊராட்சி மன்ற கூட்டத்தில், இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி, திருப்பூர் கலெக்டர், கோவை கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு அனுப்பினோம். 11 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.சபாநாயகர் தனபால் இரு மாவட்டங்களுக்கு அலையும் எங்களது சிரமத்திற்கு தீர்வாக, பொங்கலுார் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE