பொள்ளாச்சி : பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு கட்டடம் இடிக்கும் பணிக்கான ஏலம் நேற்று நடந்தது. அதில், 'சிண்டிகேட்' அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்ததாக புகார் கிளம்பியுள்ளது.
பொள்ளாச்சியில், இரண்டு ஏக்கர் பரப்பில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. மூன்றடுக்கு கொண்ட, 24 பிளாக்களில் போலீசாருக்கு குடியிருப்பு கட்டப்பட்டது. 240 போலீசார் குடியிருப்புகள்; 12 எஸ்.ஐ.,க்கள், மூன்று இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள் இருந்தன. பொள்ளாச்சி பகுதியில் பணியாற்றும் போலீசார், குடும்பத்துடன் வசித்தனர்.போலீசார் குடியிருப்பு கட்டப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், பராமரிப்பும் இல்லாததால், கட்டடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, புதர்கள் மண்டி காணப்பட்டது.உயர் அதிகாரிகளின் அறிவுரைப்படி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் காலி செய்யப்பட்டன.
இந்நிலையில், போலீஸ் குடியிருப்பு கட்டடம் இடிக்கும் பணிக்காக ஏலம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தால், நேற்று நடத்தப்பட்டது. குடியிருப்பு வளாகத்திலுள்ள விநாயகர் கோவில் அருகே, ஏலம் நடந்தது.உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் கலைக்கோவன், ஜானகிராமன் முன்னிலை வகித்தனர்.கோவை, சென்னை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலத்தில் பங்கேற்க, 102 பேர் வந்தனர்.காலை, 11:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 'டோக்கன்' வழங்கப்பட்டது. விண்ணப்பத்துடன், 10,830 ரூபாய் பணம் பெறப்பட்டது. அரசு ஆரம்ப விலையாக, 10 லட்சத்து, 83 ஆயிரம் ரூபாய் கோரப்பட்டது. தொடர்ந்து ஏலம் எடுப்பவர்கள் விலையை உயர்த்தினர்.
ஏலம் துவங்கிய சில மணி நேரத்துக்குள் ஏலம் முடிவுக்கு வந்தது. இறுதியாக கோவை உக்கடத்தை சேர்ந்த நிறுவனம், 16 லட்சத்து, 33 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது. அதிகாரிகள் ஏலம் உறுதி செய்யலாமா என கோரி மூன்று முறை மணி அடித்து உறுதி செய்தனர். கிளம்பியது புகார்ஏலம் எடுக்க வந்தவர்கள் கூறுகையில், 'போலீஸ் குடியிருப்பு கட்டடம் இடிப்பு பணிக்கு, 50 லட்சம் ரூபாய் வரை ஏலம் செல்லும்; ஏலம் எடுப்பவர்கள் சிலர், 'சிண்டிகேட்' அமைத்ததால் குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில், ஐந்து நிமிடம் தாமதமாக வந்த திருச்சியை சேர்ந்த நிறுவனத்தை அனுமதிக்கவில்லை. மறு ஏலம் விட வேண்டும்,' என்றனர்.இது இறுதி அல்ல!
அதிகாரிகள் கூறுகையில், 'கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, பெட்டியில் போடப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். அதில், இந்த தொகையை விட அதிக தொகை கோரியிருந்தால் அவர்களுக்கு, கட்டடம் இடிக்கும் அனுமதி வழங்கப்படும். ஏலம் எடுத்தவர்களை தவிர மற்றவர்களுக்கு முன்பணம் திருப்பி வழங்கப்பட்டது,' என்றனர்.'மணி'ய மறந்துட்டாங்க!தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில், ஏலத்தை உறுதி செய்ய மூன்று முறை மணி அடித்து உறுதி செய்யப்படும். ஆனால், நேற்று ஏலம் நடத்த கோவையில் இருந்து வந்த அதிகாரிகள், மணி எடுத்து வர மறந்துவிட்டனர். இதனால், அங்கு இருந்த விநாயகர் கோவில் மணியை பயன்படுத்தி, கட்டடம் இடிக்க ஏலம் நடத்தி சமாளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE