உடுமலை : உடுமலை, பெரியகோட்டை ஊராட்சியில், ரூ. 7.20 கோடி மதிப்பிலான, 120 சென்ட் 'ரிசர்வ்' சைட், 'தினமலர்' செய்தியால், மீட்கப்பட்டது.
உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில், கே.ஜி.,நகர் லே-அவுட்டிற்கு, 96.15 சென்ட் நிலமும், கே.ஜி.,நகர் விரிவுக்கு, 49.35 சென்ட் நிலமும், பூங்கா, விளையாட்டு மைதானம் என பொது உபயோகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஊராட்சிக்கு ஒப்படைத்த ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள, பொது ஒதுக்கீட்டு நிலங்களை, போலி ஆவணங்கள் தயாரித்தும், ஒன்றிய அதிகாரிகள் பெயரில், லே-அவுட் அங்கீகாரத்திற்கான உத்தரவும் போலியாக தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்த மோசடி குறித்து, 'தினமலர்' நாளிதழில், 2019 மே 2ம் தேதி செய்தி வெளியானது.
இதனையடுத்து, ஒன்றிய அதிகாரிகள், திருப்பூர் எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை பொதுமக்கள் வாங்கி ஏமாற வேண்டாம் என, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஒன்றிய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், ஜூன் 8ல், லே-அவுட் உரிமையாளர், கோவை, ஒண்டிபுதுாரை சேர்ந்த, பாலகிருஷ்ணன் மற்றும், 5 பேர் மீது, அரசு ஆவணங்களை திருத்துதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது குறித்த கிரிமினல் வழக்கு, உடுமலை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், மொத்தமுள்ள, 145.5 சென்ட் நிலத்தில், போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட, 25 சென்ட் நிலம் போக மீதம் உள்ள, 120 சென்ட் நிலம் மீண்டும், ஊராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியகோட்டை ஊராட்சித்தலைவர் பெயருக்கு, நில உரிமையாளர்கள், பாலகிருஷ்ணன், மகாலட்சுமி, குணவதி, லட்சுமணகுமார், விக்னேஷ்வரா ஆகியோர், சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு மூலம் ஒப்படைத்துள்ளனர்.மேலும், இதன் மீது வரும் வில்லங்கங்களை தாங்களே, தங்கள் செலவில் தீர்வு செய்து தருவதாகவும், சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து தந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகத்தால் மீட்கப்பட்ட, இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 7.20 கோடி ரூபாய் ஆகும்.வழக்கு தொடரும்ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, நில உரிமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து, மீதம் உள்ள நிலத்தை அரசுக்கு ஒப்படைத்துள்ளனர்.
போலி ஆவணம் தயாரித்தல், விற்பனை உள்ளிட்ட கிரிமினல் வழக்கு, நில உரிமையாளர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது நடந்து வருகிறது. அந்த வழக்கில், உரிய தீர்வு கிடைக்கும். விற்பனை செய்யப்பட்ட நிலத்தையும் மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE