அன்னுார் : சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற, உடற்கல்வி ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 1,400க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 551 பணியிடங்களுக்கு மட்டும், தற்போது பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு, பணி நியமனம் கிடைக்காத, உடற்கல்வி ஆசிரியர்கள், அன்னுாரில், சபாநாயகர் தனபாலிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், 2017ல், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பாசிரியர் தேர்வு நடந்தது.
தேர்வு முடிவுகள், 2018 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. தேர்ச்சி பெற்ற, 1,250 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோம். அதில், 551 பேருக்கு மட்டும், கடந்த மாதம் பணி நியமனம் வழங்கப்பட்டது.இதற்குமுன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களை விட கூடுதலாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில், அரசு பள்ளிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற பலரும், 40 வயதை நெருங்கியவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2012 ம் ஆண்டு போல் தற்போதும், சிறப்பாசிரியர் தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE