செய்தி சில வரிகளில்... கேரளா விரைந்த பேரிடர் மீட்பு படை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்... கேரளா விரைந்த பேரிடர் மீட்பு படை

Added : டிச 03, 2020
Share
அரக்கோணம்: 'புரெவி' புயலால், தென் மாவட்டங்கள், கேரளாவில் பலத்த மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மீட்பு பணிகள் மேற்கொள்ள, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து, 27 குழுக்களைச் சேர்ந்த, 600 வீரர்கள் நேற்று முன்தினம் மாலை, அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.தென் மாவட்டங்களுக்கு, 17 குழுவினரும், புதுச்சேரி, காரைக்காலுக்கு இரண்டு,

அரக்கோணம்: 'புரெவி' புயலால், தென் மாவட்டங்கள், கேரளாவில் பலத்த மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், மீட்பு பணிகள் மேற்கொள்ள, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து, 27 குழுக்களைச் சேர்ந்த, 600 வீரர்கள் நேற்று முன்தினம் மாலை, அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு, 17 குழுவினரும், புதுச்சேரி, காரைக்காலுக்கு இரண்டு, கேரள மாநிலம், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரத்துக்கு எட்டு குழுவினரும், மீட்பு உபகரணங்களுடன் சென்றுள்ளனர்.

6 வீடுகளை சூறையாடிய யானைகள்

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, தேவாலா, 'டான்டீ' சரகம் எண் ஒன்று-க்கு உட்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்கு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, இரண்டு யானைகள் வந்தன.ராமகிருஷ்ணன் என்பவரது வீட்டு முன்பக்க சுவரை இடித்து, உள்ளே வைத்திருந்த பொருட்களை வெளியே துாக்கி போட்டு, சூறையாடின. தொடர்ந்து, அருகிலுள்ள ஐந்து வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்துள்ளன.தொழிலாளர்கள் யாரும் வெளியில் வராததால், உயிர் சேதம் ஏற்படவில்லை.


பஞ்., தேர்தல் 4வது முறை ஒத்திவைப்புசிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சியில், 16 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி தலா எட்டு இடங்களுடன், சமபலத்தில் இருப்பதால், தலைவர் தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. போதுமான உறுப்பினர்கள், தேர்தல் நேரத்தில் வராததால், மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டது.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, டிச., 4ல் தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது. 'புரெவி' புயல், மழை எச்சரிக்கை மற்றும் டிச., 4ல் முதல்வர் தலைமையிலான கொரோனா ஆய்வு கூட்டம் இருப்பதால், தேர்தல், 4வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.டிச., 11ல் தேர்தல் நடக்க உள்ளது.

குண்டு பாய்ந்து தொழிலாளி காயம்

ஓமலுார்: சேலம் மாவட்டம், ஓமலுார், புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 33; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன், கோட்டமேட்டுப்பட்டி, மாரியம்மன் கோவில் அருகே, நவ., 30 மாலை, 5:00 மணிக்கு, 'ஏர் கன்' துப்பாக்கி மூலம், பறவைகளை சுட்டுக் கொண்டிருந்தனர்.

அவ்வழியே சென்ற, கார்த்திகேயனின் சித்தப்பா செல்வம், 43, என்பவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது.அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் மற்றும் சிறுவன் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

'டாஸ்மாக்' கடையை மூட, போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், எந்நேரமும் அடிதடி, தகராறு ஏற்படுகிறது. கடையை மூடக்கோரி, தமிழர் கழகம் கட்சி சார்பில், நேற்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.அதே சமயம், கொலை முயற்சி தொடர்பாக, மூன்று நாட்களாக மூடிக்கிடந்த இந்தக் கடையைத் திறக்கக் கோரி, நேற்று மதியம், 11:30 மணி முதல், பெண்கள் உட்பட மது பிரியர்கள் போராட்டம் செய்தனர். இன்ஸ்பெக்டர் கோபிநாத் பேச்சு நடத்தி, கலெக்டருக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே, கரடிகுளத்தைச் சேர்ந்த செல்லபெருமாள் மகன் சுகேஷ், 9. அங்குள்ள பள்ளியில், நான்காம் வகுப்பு படித்தான். உடைகுளம் கண்மாயில் நண்பர்கள் இருவருடன் நேற்று குளிக்கச் சென்றார்.அப்போது, மூவரும் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர். அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள், சிறுவர்களை மீட்டனர். இருப்பினும், சிறிது நேரத்தில் சுகேஷ் இறந்தார். மற்ற இரண்டு சிறுவர்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X