மதுரை:'இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் எந்த மொழியில் அதிக கல்வெட்டுகள் உள்ளன' என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தர விட்டது.
நடவடிக்கை
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர், இளஞ்செழியன் தாக்கல் செய்த பொதுநல மனு:மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வகப் பிரிவு, மைசூரில் உள்ளது.தமிழக அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட, 90 சதவீத கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் நகல் எடுக்கப்பட்ட படிகள், அங்கு உள்ளன.அவை, முறையாக பராமரிக்கப்படவில்லை. அவை சேதமடைந்து, அழியும் நிலையில் உள்ளன. அங்கு சென்று, தமிழக தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய இயலவில்லை.
மைசூரில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் அவற்றின் நகல் படிகளை, தமிழகத்திற்கு கொண்டு வந்து பராமரிக்க, நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மத்திய அரசுத் தரப்பு, 'இவை, முதலில் ஊட்டியில் பாதுகாக்கப்பட்டன. தட்பவெப்ப நிலை கருதி, மைசூருக்கு மாற்றப்பட்டன. அங்கு பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தது.
கட்டமைப்பு வசதி
நீதிபதிகள் உத்தரவு:
இந்தியாவில், எத்தனை கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் எந்தெந்த மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன. எந்த மொழியில், அதிக கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மைசூரில் உள்ளவற்றில், எத்தனை சேதம் அடைந்துள்ளன. மத்திய தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வகப் பிரிவின் கிளையை, தமிழகத்தில் ஏற்படுத்தினால் என்ன?மைசூரில் உள்ள பொருட்களை தமிழகத்திற்கு மாற்றி பாதுகாக்க வாய்ப்புள்ளதா, அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, தமிழக அரசு ஏற்படுத்தி தர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில தொல்லியல் துறைகள், டிச., 10ல் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.