கோவை : கோவையில் உள்ள அச்சகங்களில், 2021ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, தமிழ் கடவுளான முருக பெருமான் 'டிரெண்டிங்'கில் உள்ளதால், முருகன் படத்துடனான காலண்டர்களுக்கு, ஆர்டர் அள்ளுகிறது.கோவையில் காலண்டர் தயாரிக்கும் பணியில், 30க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன. இங்கு, வாடிக்கையாளர்களுக்கு புதிய 'டிசைன்' காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும். பிடித்த 'டிசைன்களை' ஆர்டர் செய்தால், காலண்டர் தயாரித்து தரப்படும்.சமீப நாட்களாக, தமிழகத்தில் கந்த சஷ்டி, வேல் யாத்திரை குறித்த செய்தி, சமூக வலைதளங்களில் 'டிரெண்டாகி' வருவதால், மக்கள் மனதில் முருகக்கடவுளின் பெயர் ஆழப்பதிந்து விட்டது.
இதனால், வாடிக்கையாளர்கள் திருச்செந்துார் முருகன், மலேசியா முருகன், பழனி ராஜ அலங்காரம், கோல்டன் முருகன் போன்ற படங்களுடன், காலண்டர் அதிகம் 'ஆர்டர்' செய்வதாக, அச்சக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.இது குறித்து, காலண்டர் மொத்த விற்பனையாளர் மாரிச்சாமி கூறியதாவது:கொரோனாவுக்கு பிறகு, வியாபாரம் குறைவாக இருக்கும் என, எதிர்பார்த்தே வேலையை துவங்கினோம். ஆனால், மக்களிடையே காலண்டர் வாங்குவது, புதிய டிசைன்கள் 'ஆர்டர்' செய்வது அதிகரித்துள்ளது.தரத்தை பொறுத்து, ஒரு காலண்டர் ரூ. 10 முதல் ஆயிரத்து 500 வரை விற்கப்படுகிறது. வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் 'டூ இன் ஒன்' காலண்டர், 'பிரேம்' போட்ட காலண்டர், 'மல்டி' கலர் காலண்டர் என, புதிய ரகங்கள் பல வந்துள்ளன.
இந்த ஆண்டு, தமிழ் கடவுள் முருகன் படத்துடன் கூடிய காலண்டர்கள் அதிகம் விற்பனையாகின்றன. மொத்த ஆர்டர்களும் கிடைத்துள்ளன. குறைந்த அளவே காலண்டர்கள் தயாரித்தோம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக விற்பனை அதிகரித்துள்ளது. தேர்தல் வருவதால், அரசியல் தலைவர்களின் படங்கள் தாங்கிய காலண்டர்களுக்கு, பத்தாயிரத்துக்கு மேல் ஆர்டர் கிடைத்துள்ளது. தனியார் நிறுவனங்களிடமிருந்து குறைந்த ஆர்டரே கிடைக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE