'கேரள பத்திரிகையாளருக்கு எதிரான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்'

Added : டிச 03, 2020
Share
Advertisement
புதுடில்லி:'கேரள பத்திரிகையாளர் கப்பான் தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன' என உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள ஹத்ராசில் 19 வயது தலித் பெண் கடந்த செப்டம்பரில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார்.

புதுடில்லி:'கேரள பத்திரிகையாளர் கப்பான் தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன' என உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள ஹத்ராசில் 19 வயது தலித் பெண் கடந்த செப்டம்பரில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் இரவோடு இரவாக தகனம் செய்தது சர்ச்சையை தீவிரமாக்கியது.

இந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.இதற்கிடையே டில்லியில் இருந்து ஹத்ராஸ் செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உட்பட நான்கு பேரை உ.பி. போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்புடன் தொடர்பிருப்பதால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்நிலையில் கப்பானுக்கு 'ஜாமின்' வழங்க கோரி கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உ.பி. அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: சித்திக் கப்பான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலக செயலராக உள்ளார். ஆனால் கேரளாவை சேர்ந்த பத்திரிகை ஒன்றில் பணியாற்றுவதாக கூறி அடையாள அட்டை வைத்துள்ளார். அந்த பத்திரிகை 2016லியே நிறுத்தப்பட்டு விட்டது.ஹத்ராஸ் சென்று மக்களிடம் ஜாதி உணர்வை துாண்டி மோதலை ஏற்படுத்தி மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது தான் கப்பானின் நோக்கம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்து கேரள பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'உ.பி. அரசு கப்பான் மீது ஆதாரமின்றி குற்றம்சாட்டுகிறது. பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை' என கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன் நடந்தது.உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில் 'கேரள பத்திரிகையாளர் கப்பான் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதற்கு கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார்.நீதிபதிகள் கூறுகையில் இந்த வழக்கை உ.பி. மாநில உயர் நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும்' என்றனர். இதற்கு கபில் சிபல் 'இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திலேயே நடத்த விரும்புகிறேன்' என்றார்.இதையடுத்து விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X