திருப்பதி:'ஹிந்து சனாதனதர்மத்தை பாதிக்காத எந்தஒரு நற்செயலும் ஏற்றுக்கொள்ள கூடியதே' என காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
திருப்பதி அலிபிரியில் அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி உதவியுடன் உருவாக்கப் பட்டு வரும் கோசாலையை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மதியம் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:நம் கலாசாரத்தில் கோபூஜை முக்கியமான ஒன்று. இதன் பலன் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் கோசாலைகளையும் வட இந்தியாவில் வேதபாடசாலைகளையும் அதிக அளவில் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். தேவஸ்தானம் இதை முன்னெடுத்து செய்வது பாராட்டத்தக்கது.இவ்வாறு அவர்கூறினார்.அடுத்து திருமலையில் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவர் ரங்கநாயகர் மண்டபத்தில் நடந்த வேத பாராயணத்தில் கலந்து கொண்டு அனுக்கிரக பாஷனம் செய்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மானிடர்கள் வாழ்க்கைக்கு மூலம் வேதம். உலக நன்மைக்காக தேவஸ்தானம் திருமலையில் வேதபாராயணத்தை நடத்தி வருகிறது.கார்த்திகை மாதத்தை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் துளசி பூஜை, தாத்ரி விஷ்ணு பூஜை, துளசி கல்யாணம், ராதாஷ்டமி, கோபாஷ்டமி, அஸ்வத் நாராயண பூஜை உள்ளிட்ட விஷ்ணுவிற்கு மகத்தான பூஜைகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
இம்முறை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.சாஸ்திரத்திற்கும் கலாசாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தாத எந்த ஒரு நற்செயலும் ஏற்கத்தக்கது. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இக்காலத்தில் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுவது தவறு அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE