அவிநாசி : அவிநாசி அருகே, 846 ஏக்கரில் 'சிப்காட்' தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூருக்கு, நவ., 6ல் வந்த முதல்வர் பழனிசாமி, ''அவிநாசி அருகே, 846 ஏக்கரில், தொழில் பூங்கா அமைக்கப்படும்'' என, தெரிவித்தார். இதற்காக, அவிநாசி ஒன்றியம், தத்தனுார், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் என, மூன்று ஊராட்சிகளில் உள்ள பட்டா தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் என, 846 ஏக்கர் நிலம், 'சிப்காட்' நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் உள்ள தரிசு நிலம், விவசாய நிலம், வீடு, மரங்கள் உள்ளிட்டவை குறித்து, நேற்று முன்தினம் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புஞ்சை தாமரைக்குளம் பகுதியில் உள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று, அவிநாசி, சேவூர் ரோட்டிலுள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் ஜெகநாதன் பேச்சு நடத்தினார்.அப்போது விவசாயிகள் கூறியதாவது:புஞ்சை தாமரைக்குளத்தை சுற்றி, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில்களான கால்நடை வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, விவசாய கூலி தொழில் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
கிணற்றுப்பாசனம் மூலமே, விவசாயம் செய்து வருகின்றனர்.தொழில் பூங்கா அமைத்தால், விவசாயம் பாதிக்கும். அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டல் பணி நடந்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சூழலில், தொழில்பூங்கா அமைக்கும் முயற்சி, அதிர்ச்சி அளிக்கிறது. இதனை கைவிட்டு, விவசாயத்தை காக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதற்காக, 'நில அளவை பணியை நிறுத்த வேண்டும்' எனக்கூறி, எம்.எல்.ஏ., அலுவலகம் முன் முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக, தாசில்தார் கூறியதால், முற்றுகை கைவிடப்பட்டது.அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டல் பணி நடந்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சூழலில், தொழில் பூங்கா அமைக்கும் முயற்சி, அதிர்ச்சி அளிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE